தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டுமா?: ஏன் இந்த ஆணவமான பேச்சு?

-சி. பசுபதி, தலைவர், தமிழ் அறவாரியம், மே 14, 2013.

கடந்த 60 க்கு மேற்பட்ட ஆண்டுகளாக அம்னோ அரசியல்வாதிகள் “தாய்மொழிப்பள்ளிகள்” மூடப்பட வேண்டும் என்றுpasupathi_tamil_foundation இடையிடையே பாடி வந்த பல்லவியை இப்போது மலாய்க் கல்விமான்களும் பாட ஆரம்பித்துள்ளனர்.

இப்பல்லவியைத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலங்களில் பாடுவார்கள். தேர்தலுக்கு முன்னர் நிறுத்தி விடுவார்கள். தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் பாடத் தொடங்கி விடுவார்கள்.

மே 5 ஆம் தேதி நாட்டின் 13 ஆவது பொதுத்தேர்தல் நடந்து முடிந்து  விட்டது. மே 12 ஆம் தேதி பல்லவியை மீண்டும் தொடங்கி விட்டனர்.

கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகப் பணியாற்றும் அப்துல் ரஹ்மான் அர்ஷாத் தேசிய ஒற்றுமைக்காகத் தமிழ்ப்பள்ளிகளும், சீனப்பள்ளிகளும் தேசியப்பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்ற தமது அறிவுசார்ந்த கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

இந்த வேந்தர் பெருமானின் கருத்தை அக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்த நீதி பெருமான் முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா ஆதரித்ததோடு அதை நீதிமன்ற உத்தரவைப் பெற்று அமல்படுத்தலாம் என்று ஆலோசனை கூறினார். இந்தக் கருத்தரங்கை பிடிஎன் பயிற்சி நடத்தும் பிரதமர் துறையின் (Biro Tata Negara) முன்னாள் இயக்குனர் கமருடின் கச்சார் வழிநடத்தினார்.

ஆக, இந்த “தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி ஒழிப்பு” பல்லவியில் பங்கேற்ற அனைவரும் அம்னோவின் 60 ஆண்டுகால “இறுதிக் குறிக்கோள்” என்ற தாய்மொழி ஒழிப்பு கொள்கையை ஆதரிப்பவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கு பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு தெரியாமல் இருக்க முடியாது. அம்னோ தலைவரான அவருக்கும், அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை முழுமையாக ஆதரிக்கும் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

தமிழ்ப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு தடங்கலாக இருந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டை கூறுமாறு இவர்களுக்குச் சவால் விடுகிறோம்.

தாய்மொழிப்பள்ளிகளை தேசியப்பள்ளிகளாக மாற்றுவதே தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான வழி என்று இவர்கள் கொக்கரிக்கிறார்கள். அப்படி ஏதும் இல்லை என்கிற அடிப்படையில் கருத்துக் கூறியுள்ளார் மகாதீர்.

இத்தேசியமொழிப்பள்ளிகளின் கதாநாயர்களில் ஒருவரான மகாதீர் முகமட் தேசியப்பள்ளிகள் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக ஓர் இனத்தின் மற்றும் ஒரு சமயத்தின் பள்ளியாக மாற்றப்பட்டு வருகிறது என்று தேசியப்பள்ளியின் தேசியத் தன்மைக்கு சான்று வழங்கியுள்ளார்.

தேசியப்பள்ளி தமது குழந்தையை மலேசியனாக உருவாக்காது. ஆகவே, தமது குழந்தையை தேசியப்பள்ளியிலிருது மீட்டுக் கொள்வதாக மகாதீரின் மகள் மரினா மகாதீர் அறிவித்தார். இதே கருத்தை பலர் கொண்டுள்ளனர். பலர் தங்களுடைய குழந்தைகளை தேசியப்பள்ளியிலிருந்து மீட்டு அனைத்துலகப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

“ஒரே வகுப்பறையில் படித்து, ஒரே கண்டீனில் உணவும் நீரும் உட்கொண்டு, ஒரே திடலில் விளையாடினால்தான் தேசிய ஒற்றுமையும், முழுமையாக்கமும் ஏற்படும் என்று அதே கருத்தரங்களில் பேசிய முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா கூறினார். ஆனால் சமையல்காரர் யார் என்று அவர் கூறவில்லை. நாடாளுமன்றத்தில் மாட்டை வெட்டி சமைத்து விருந்து வைத்தாரே அந்த சமையல்காரரா? இந்த முன்னாள் நீதிபதி தாய்மொழியைக் கொலை செய்ய முயற்சிப்பதோடல்லாமல், உணவையும், பழக்கவழக்கங்களையும் கொலை செய்ய ஆலோசன கூறுகிறார்.

தாய்மொழிப்பள்ளி மொழியை மட்டும் போதிப்பதில்லை. அப்பள்ளி அம்மொழி சார்ந்த மாணவர்களின் கலை, பண்பாடு, சமயம் மற்றும் இதரப் பாரம்பரியங்களின் பாசறையாக விளங்கிறது என்பதை இந்த முன்னாள் நீதிபதி ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், அதற்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூற விரும்புகிறோம்.

தமிழ் மொழியும் இந்நாட்டின் அரண்மனை மொழியாகவும், பொது வாணிக மொழியாகவும் இருந்ததால் தன்னை தமது தந்தை தமிழ் கற்கச் செய்ததாக முன்ஷி அப்துல்லா கூறியுள்ளதை இந்த அம்னோவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதர மலேசிய குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள இந்த அரசியல்வாதிகள் அரசமைப்புச் சட்ட விதி 153 ஐ மறுஆய்வு செய்து மலேசிய மக்களின் உரிமைகளை இன அடிப்படையில் இல்லாமல் தேவை அடிப்படையில் மாற்றி அமைக்கத் தயாரா என்று கேட்கிறோம்.

தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு குறுக்கே நின்றதாக வரலாறு இல்லை. ஒரே மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமையின் அரணாக இருந்தது என்ற வரலாறும் இல்லை என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இது போன்ற கொள்கைகளால் இந்த நாட்டின் இனவாதத்திற்கு தூபமிட்டவர்கள் அம்னோ தலைவர்கள் என்று அடித்துக் கூறுகிறோம்.

அம்னோ தலைவர்களின் இனவாதக் கொள்கை மற்றும் தமிழ், சீனமொழிப்பள்ளிகள் ஒழிப்புக் கொள்கையான “இறுதிக் குறிக்கோள்” இன்று வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது.   அம்னோவின் தற்போதைய துணைத் தலைவர் முகைதின் யாசின் தாய்மொழிப்பள்ளி ஒழிப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். முதலில் மலாய்க்காரர் பின்னர் மலேசியர் எனப் பகிரங்கமாக கூறிக்கொள்ளும் இவர் 29.10. 2009 இல், கோத்தா திங்கியில் ஒரே மொழிப்பள்ளியை ஆதரித்துப் பேசியுள்ளார். இவரின் தலைமைத்துவத்தில் தேசியப்பள்ளி எப்படி இருக்கும் என்று கேட்க விரும்புகிறோம்.  நஜிப் ரசாக்  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் 11இல் நஜிப் ரசாக் வெளியிட்ட மலேசிய பெரும் கல்வி திட்டத்தில் தாய்மொழிப்பள்ளிக்கு சமாதி கட்டும் திட்டம் மிகச் சாமார்த்தியமாக நுழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

ஞாயிற்றுக்கிழமை பேசிய முன்னாள் நீதிபதி தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் தேசியப்பள்ளியாக மாற மறுத்தால் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை மாற்ற வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

இதே ஆலோசனை எங்களுக்கும்  வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் செல்ல நாங்கள் தயார்.

ஆனால், இந்தப் பெரும் கல்விமான்களும், சட்டஞானிகளும் இந்த அம்னோவின் தாய்மொழி ஒழிப்புக் கொள்கையை மக்கள் நீதிமன்றத்தின்முன் மே 5 ஆம் தேதிக்கு முன்னர் ஏன் வைக்கவில்லை என்று சுண்டுவிரலை நொடித்துக் கேட்கிறோம்.

தாய்மொழிக் கல்வி இன்று உலகளவில் அரசியல் நாகரீகம் அடைந்த நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அம்னோ தலைவர்கள் எந்த அளவிற்கு அரசியல் நாகரீகம் அடைந்துள்ளனர் என்ற நமது கேள்விக்குப் பதில் வேண்டும்.