டிஏபி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், பக்காத்தான் ராக்யாட் அடைந்த வெற்றிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் வேட்பாளர்கள் தோல்வி கண்ட இடங்களில் அந்த நடைமுறை ‘நியாயமானதாக தூய்மையானதாக சுதந்திரமானதாக’ இல்லை எனச் சொல்வதாக மசீச சாடியுள்ளது.
“நாம் லிம் சொல்லும் வாதத்தை பின்பற்றினால் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட பக்காத்தான் பேராளர்களும் சட்ட விரோதமானவர்களாகக் கருதப்பட வேண்டும். அதனால் மாநில அரசாங்கமும் சட்ட விரோதமாகுமா ?” என மசீச தலைமைப் பொருளாளர் தான் சாய் ஹோ இன்று விடுத்த அறிக்கையில் வினவினார்.
லிம் கபட நாடகமாடுகிறார், இரட்டை வேடம் போடுகிறார் என அவர் சொன்னார்.
மே 5 தேர்தலுக்குப் பின்னர் லிம் தேர்தல் நடைமுறை ‘வரலாற்றில் மிகவும் கறை படிந்தது’ என எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கூறி வருகிறார்.
“முறைகேடுகள் நாடு முழுவதும் விரிவாக நிகழ்ந்துள்ளன. 30 இடங்கள் வரை அதனால்
பாதிக்கப்பட்டுள்ளன,” என லிம் மே 8 பேரணியில் கூறினார்.
“அந்த முறைகேடுகள் 21 இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வாக்கு வித்தியாசத்தில் நாங்கள்
(கூட்டரசு அரசாங்கத்தையும்) பேராக், திரங்கானு மாநில அரசுகளையும் வென்றிருக்க முடியும்.”
டிஏபி 38 நாடாளுமன்ற இடங்களையும் 95 சட்டமன்ற இடங்களையும் வென்றது. அவற்றில்
பெரும்பாலான இடங்களில் அது மசீச-வைத் தோற்கடித்தது.
இதற்கு முன்னதாக நடந்த தேர்தல்களில் பங்களா, இந்தோனேசியர்கள் ஓட்டுப் போட்டதாக யாரும் சொல்லவில்லையே! இக்குற்றச் சாட்டு இந்தத் தேர்தலில் தானே வந்திருக்கிறது! அது உண்மை என்பது நிருபிக்கப் பட்டு விட்டதே! உங்கள் தோல்வி எப்படி ஏற்பட்டது என்பதை கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள்!