முன்னாள் நீதிபதியின் உரைமீது போலீஸ் விசாரணை தொடங்கியது

1judgeமுறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லாவின் உரைக்கு எதிராக செய்யப்பட்ட புகார்கள்மீது டாங் வாங்கி போலீஸ் நிலையம் விசாரணையைத் தொடக்கியுள்ளது.

விசாரணை அதிகாரி ஒருவர், முன்னாள் நீதிபதி உரையாற்றிய நிகழ்வில் செய்திசேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளரையும் தொடர்பு கொண்டார்.

அவரது உரைக்கு எதிராக ஆகக் கடைசியாக புகார் செய்திருப்பவர் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான  கர்பால் சிங் ஆவார். இன்று அவர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கர்பால் தம் புகாரில், முகம்மட் நூர், “மிகவும் சினமூட்டும் வகையிலும் தேச நிந்தனை என்று கருதத்தக்க வகையிலும் பேசியிருப்பதாக”க் குறிப்பிட்டார்.

முகம்மட் நூர் அப்படி பேசியதன்மூலம் 1948 தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1) (பி)-இன்கீழ் குற்றம் புரிந்திருக்கிறார் என்று கூறிய கர்பால், அக்குற்றச்செயலுக்கு ரிம5,000-க்கு மேற்போகாத அபராதம் அல்லது கூடினபட்சம் மூன்றாண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்றார்.

1karpalபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்பால், அது “மலாய்க்காரர்களையும் சீனர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும்” பேச்சு என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘13வது பொதுத் தேர்தல் கண்ணோட்டம்: முஸ்லிம் தலைமைத்துவம் மற்றும் உய்யும் வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய முகம்மட் நூர், 13வது பொதுத் தேர்தலில் சீனர்கள் செய்த ‘நம்பிக்கை துரோகத்துக்கு’ எதிராக மலாய்க்காரர்கள் பொங்கி எழுவார்கள் என்று எச்சரித்தார்.

மாற்றரசுக் கட்சித் தலைவர்கள், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் உள்பட, பலரும் அப்பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள், அவரது பேச்சின் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்

டிவியில் முகம்மட் நூர்

இதனிடையே முகம்மட் நூர் இன்றிரவு 10 மணிக்கு பெர்னாமா டிவியில் “ஹல்லோ மலேசியா” நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என பெர்னாமா அறிவித்துள்ளது.

டாஹ்லான் மாமோர் நடுவர் பணி ஆற்றும் அந்நிகழ்ச்சியில் அவருடன் முஸ்லிம் வழக்குரைஞர் சங்கத் (பிபிஎம்எம்) தலைவர் சைனுல் ரிஜாலும் கலந்துகொள்வார்.

அந்நிகழ்ச்சி, ‘மலேசியாவில் எல்லா இனங்களின் சமத்துவத்துக்கும் நீதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் கூட்டரசு அரசமைப்பின் தத்துவம்’ என்ற தலைப்பைக் கொண்டிருக்கும்.

அந்நிகழ்ச்சியில் முகம்மட் நூர், அரசமைப்புப்படி  தேசிய வகை பள்ளிகளின் நிலை பற்றித் தாம் முன்பு பேசியது பற்றியும் கருத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.