நான் உருமாற்றத்தை விரும்புகிறேன், போரை அல்ல என முன்னாள் நீதிபதி விளக்குகிறார்

mohd noorமுன்னாள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா, மலாய் அரசியல் அதிகாரம் தொடர்பில் தாம் அண்மையில் அறிக்கை விடுத்த போது, தாம் போரை விரும்பவில்லை என்றும் மாறாக ‘கெட்டதிலிருந்து நல்லதுக்கு உருமாற்றம் வேண்டும்’ என்று மட்டுமே யோசனை கூறியதாக விளக்கியிருக்கிறார்.

கடந்த வார இறுதியில் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் தாம் பயன்படுத்திய “jihad” (புனிதப் போர்) என்னும் சொல் தாம் ‘போரை’ விரும்புவதாகத் தவறாக கூறப்பட்டு விட்டது என அவர் நேற்று தெரிவித்தார். அது வெறும் எண்ணமே தவிர வேறு ஒன்றுமில்லை என்றார் அவர்.

“நாம் “jihad” என்னும் சொல்லைப் பயன்படுத்தும் போது போருக்குச் செல்வது தான் மக்களுடைய எண்ணமாகும். அது அப்படி அல்ல. கெட்டதாக உள்ள ஒன்றிலிருந்து நல்லதுக்கு உருமாறுவதும் “jihad” தான்,” என முகமட் நூர் சொன்னார்.

சுயமாக உருவாக்கப்பட்ட பூசலிலிருந்து மலேசியாவைக் காப்பாற்ற தாம் நீண்ட காலமாக போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நான் என் இனம், என் பிள்ளைகள், என் பேரப் பிள்ளைகள், என் வழித்தோன்றல்கள், எல்லா மலேசியர்கள் மீதும் நான் பரிவு கொண்டுள்ளேன். நமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் பேரிடர் குறித்தே நான் அஞ்சுகிறேன்.”

“ஆகவே நான் ‘berjihad’ என்பது தங்கள் சொந்த போர்க்களத்துக்குள் விழுந்து விடாமல் மலேசிய மக்களைக் காப்பாற்றுவதற்காகும்,” என நேற்றிரவு பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹலோ மலேசியா நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் முகமட் நூர் விளக்கினார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த அந்தக் கருத்தரங்கில் பேசிய அவர், மே 5 பொதுத் தேர்தல் முடிவுகள் காரணமாக ‘சீனர்களுடைய துரோகம்’ பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு மலாய்க்காரர்களுக்கு நினைவுபடுத்துவதாக கூறியதின் வழி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

“மலாய்க்காரர்களுடைய நட்புறவுக் கரத்துக்கு சீனர்கள் துரோகம் செய்துள்ளது உண்மை. ஏனெனில் அவர்கள் தங்களிடம் பொருளாதார வலிமை இருந்த போதிலும் அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்குச் சதித் திட்டம் வகுத்துள்ளனர்,” என்றார் அவர்.