நஜிப்பின் வேதா நியமனத்தை மஇகா பாராட்டுகின்றது

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கை குழுத் தலைவர் பி வேதமூர்த்தியை துணை  அமைச்சராக நியமிக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவை மஇகா இன்று வரவேற்றுள்ளது.

நஜிப் இந்திய சமூகத்துக்குக் கொடுக்கும் உயர்வான முன்னுரிமையை அது காட்டுகிறது என அந்தக்
கட்சியின் வியூக இயக்குநர் எஸ் வேள்பாரி கூறினார்.

“வேதா ஏற்கனவே பிரதமர் மீதும் பாரிசான் நேசனல் மீதும் தீவிரமான எதிர்மறையான
குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். பிரதமர் அவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு தமது சொந்த
உணர்வுகளுக்கு மேலாக இந்திய சமூக மேம்பாட்டை வைக்க தயாராக இருப்பதையே அது
காட்டுகின்றது,” என அவர் சொன்னார்.

இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்குத் தாம் அளித்த வாக்குறுதியை
நிறைவேற்ற நஜிப் உறுதிபூண்டுள்ளதற்கு அது தக்க சான்று என்றும் வேள்பாரி குறிப்பிட்டார்.

நேற்று நஜிப் தேர்தலுக்கு பின்னர் அறிவித்த அமைச்சரவைப் பட்டியலில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த
இரண்டு அமைச்சர்களும் நான்கு துணை அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தனர்.

மஇகா தலைவர் ஜி பழனிவேல் இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சராகவும் துணைத் தலைவர் டாக்டர்
எஸ் சுப்ரமணியம் சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். மற்ற நான்கு துணை அமைச்சர்கள்
வருமாறு: எம் சரவணன் (இளைஞர், விளையாட்டு), பி கமலநாதன் (கல்வி), டாக்டர் ஜே லோகா பால
மோகன் (கூட்டரசுப் பிரதேசம்), பி வேதமூர்த்தி (பிரதமர் துறை).

“என்னைப் பொறுத்த வரையில் அதிகமான இந்தியர்கள் அரசாங்கப் பதவிகளில் இருப்பது மிகவும்
நல்லது,” எனக் கூறிய வேள்பாரி, அனைத்து மலேசியர்களுக்கும் பொருத்தமானதாக தொடர்ந்து
இருக்கும் பொருட்டு சித்தாந்தம், கொள்கை, அணுகுமுறை ஆகியவை அடிப்படையில் மஇகா, கட்சியை
மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்,” என்றார்.

பெர்னாமா