அன்வாருக்குள்ள அடிநிலை ஆதரவு கருத்துக்கணிப்பைப் பொய்யாக்குகிறது

1 pkrபிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குள்ள மாபெரும்  “அடிநிலை மக்கள் ஆதரவு”, 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோல்வி அடைந்ததை அடுத்து அவர்  அரசியலை விட்டு விலக வேண்டும் என்று ஒரு கருத்துக்கணிப்பில் 81 விழுக்காட்டினர் தெரிவித்துள்ள கருத்தைப் பொய்யாக்குகிறது என்று கூறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன்.

“பொதுத் தேர்தலின் மோசடி முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்று கூறி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும்வரை போராடப்போவதாக அவர் அறிவித்தது முதல் நாடு முழுக்க அவருக்குக் கிடைத்துவரும்  அடிநிலைமக்களின் மாபெரும் ஆதரவு அந்தக் கருத்துக்கணிப்புடன் முரண்படுகிறது”, என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1 pkr1இந்த ஆதரவு நாடு முழுக்க நடைபெறும் பேரணிகளில் அன்வாருக்காக “இலட்சக்கணக்கில் கூடும் கூட்டத்தில்” பிரதிபலிக்கிறது.

“சமூக வலைத்தளங்களிலும்  தெருவோரங்களிலும் பேரணிகளிலும் பெரும்பாலானோர்,  காரியம் கைகூடும்வரை அன்வார் பணியைத் தொடர வேண்டும் என்று ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கின்றனர்”.

1 pkr surenஅண்மைய பொதுத் தேர்தலில் பாடாங் செராயில் போட்டியிட்டு வென்ற சுரேந்திரன் (இடம்), தேர்தலில் பக்காத்தான் 51 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றதைச் சுட்டிக்காட்டினார். அது மலேசியர்களில் மிகப் பலர் மாற்றரசுக் கட்சி அரசாங்கம் அமைப்பதையும் அன்வார் பிரதமராவதையும் விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

எனவே, “மக்களின் விருப்பம் நிறைவேறும்வரை” தலைவராக இருக்கக் கடமைப்பட்டுள்ள அன்வார் அரசியலை விட்டு விலகுவது “பெருந் தவறாகும்” என்றாரவர்.

இணைய வர்த்தக செய்தித்தளமான தி எட்ஜ், இணையவழி மேற்கொண்ட ஆய்வில் கலந்துகொண்ட 12,736 பேரில் 10,396 பேர், மே 5 பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றத் தவறினால் அரசியலைவிட்டு விலகுவதாகக் கூறிய அன்வார் ‘சூளுரைத்தபடி விலக வேண்டும்’ என்ற கருத்தை ஒப்புக்கொள்வதாகக் கூறியிருந்தனர்.

இதனிடையே, நேற்று ஜோகூர் பாருவில் 505 கறுப்புப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த மாநில பிகேஆர் செயலாளர் அப்துல் சுக்கூரையும் மாநில செயல்முறை செயலாளர் யுவனேஸ்வரன் ராமராஜையும் போலீசார் விசாரணைக்கு அழைத்திருப்பது குறித்து பிகேஆர் கவலை தெரிவித்துள்ளது.

“அவர்களை விசாரணைக்கு அழைத்திருப்பது, உரிமையைப் பயன்படுத்தி அமைதியான முறையில் ஒன்றுகூட முனைவோரை மிரட்டுவதுபோல் உள்ளது” என பிகேஆர் தொடர்புப் பிரிவு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.