‘ஆகவே இது என்ன உங்க அப்பனுடைய நாடு என நினைக்கின்றீர்களா?’

anwarமே 5 பொதுத் தேர்தல் முடிவுகள் மீது மகிழ்ச்சி அடையாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் எனக் கேட்டுக் கொள்ளும் அறிக்கை மலேசியர்களை அவமானப்படுத்துவதாகும். இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

“ஆகவே இது என்ன உங்க அப்பனுடைய நாடு என நினைக்கின்றீர்களா ? இது மக்களுக்கு  அவமானம்,” என அவர் நேற்றிரவு நெகிரி செம்பிலான், சிரம்பானில் நிகழ்ந்த கறுப்பு 505 பேரணியில்  பேசிய போது சொன்னார்.

அந்தப் பேரணியில் 30,000க்கும் மேற்பட்ட பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் அதில் கலந்து
கொண்டனர்.

anwar1புதிய உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கடந்த வியாழக் கிழமையன்று உத்துசான்
மலேசியாவில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது பற்றி அன்வார் கருத்துரைத்தார்.

புதிய உள்துறை அமைச்சருடைய அறிக்கை அபத்தமானது என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான்
எங்-கும் சாடியிருக்கிறார்.

என்றாலும்ஸாஹிட் அறிக்கை மீது மக்கள் கொண்டுள்ள ஆத்திரத்தைத் தணிப்பதற்கு புதிய இளைஞர்,  விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் முயன்றார்.

அது ஸாஹிட்டின் சொந்தக் கருத்து என்றும் அமைச்சரவையின் கருத்து அல்ல என்றும் கைரி  சொன்னார்.

அகமட் எழுதிய ‘திணிக்கப்படும்’ கட்டுரையையும் அன்வார் சாடினார்

உள்துறை அமைச்சருடைய அறிக்கையை ‘முட்டாள்தனமானது’ என வருணித்த அன்வார் சாஹிட்
கட்டுரை வெளியானதற்கு மறு நாள் அதே பத்திரிக்கையில் நிதித் துணை அமைச்சர் அகமட் மஸ்லான்
எழுதியுள்ள இன்னொரு கட்டுரையையும் கண்டித்தார்.

செலுத்தப்பட்ட வாக்குகளில் பக்காத்தான் பிஎன் -னைக் காட்டிலும் அதிகமான வாக்குகளைப்
பெற்றுள்ளதை நிராகரிக்கும் அந்தக் கட்டுரையில் ‘திணிக்கப்பட்டது’ என்ற சொல்லை அகமட்
பயன்படுத்தியுள்ளது ‘ஆபாசமானது’ என அன்வார் சொன்னார்.

anwar2“இன்னொரு அம்னோ அமைச்சர் சொல்கிறார்: ‘அன்வார் மக்கள் மனதில் திணிக்க வேண்டாம்’. இது  மக்களுடைய சிந்தனைக்கு விடுக்கப்பட்டுள்ள அவமானமாகும்,” என்றார் அன்வார்.

பக்காத்தான் இந்த நாட்டின் சட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் செலுத்தப்பட்ட  வாக்குகள் விகிதத்தில் தான் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டு மக்கள் மனதில்  அதனை ‘திணிக்க வேண்டாம்’ என அகமட் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நாட்டு சட்டங்களின் கீழ் தேர்தலில் அதிகமான இடங்களைப் பெறுகின்றவரே வெற்றியாளர் என  முடிவு செய்யப்படுகின்றது. செலுத்தப்பட்ட வாக்குகள் அடிப்படையில் அல்ல என அவர் சொன்னார்.