புதிய அமைச்சரவை : மசீசவில் அடுத்து நிகழப்போகும் புதிய சுற்று உள்சண்டைகள்

1 mcaஒரு அலசல் Lee Way Loon

புதிய அமைச்சரவையில் மசீச பிரதிநிதிகள் இடம்பெற மாட்டார்கள் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், புதன்கிழமை பிரதமர் அறிவித்த புதிய அமைச்சரவையைப் பார்க்கையில் அது மசீசவில் அடுத்து நிகழப்போகும் புதிய சுற்று உள்சண்டைகளுக்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது.

பிஎன்னின் உறுப்புகட்சிகளில் ஒன்றான மசீச, 37 நாடாளுமன்ற இடங்களுக்கும் 90 சட்டமன்ற இடங்களுக்கும் போட்டியிட்டது. ஆனால், நாடாளுமன்றத்துக்கு 7 இடங்களையும் சட்டமன்றங்களுக்கு 11 இடங்களையும் மட்டும்தான் வெல்ல முடிந்தது.

இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, 2011, 2012 ஆண்டுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அரசாங்கப் பதவி எதனையும் ஏற்பதில்லை என்ற முடிவை அது பின்பற்றியது.

1 mca1ஆனாலும் மசீச அமைச்சரவைக்குத் திரும்பிவரும். எப்போது என்றால், சுவா (படத்தில் வலம் இருப்பவர்) வெளியேற்றப்பட்டால் அது திரும்பிவரும்  என்றே பலரும் கருதுகின்றனர்.

நஜிப்புக்கும்கூட அந்த எதிர்பார்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது. அதனால்தான் அவர், போக்குவரத்து அமைச்சை மசீசவுக்காக ஒதுக்கி வைத்திருப்பதுபோல் தோன்றுகிறது. இப்போதைக்குத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் அந்த அமைச்சையும் கவனித்துக் கொள்கிறார்.

இது, மசீச, அதன் ஆண்டுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிலிருந்து  விரைவில் தடம்புரளும் என்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

சுவா-எதிர்ப்பு அணி கத்தியைத் தீட்டுகிறது

மசீச ஆண்டின் பிற்பகுதியில் அதன் ஆண்டுக்கூட்டத்தை நடத்தும். அப்போது பொதுத்  தேர்தலில் வெற்றிபெற்ற துணைத் தலைவர் வியோ தியோங் லாய், இளைஞர் தலைவர் வீ கா சியோங், முன்னாள் தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான் ஆகிய மூன்று எம்பிகளும் அணி சேர்ந்து சுவாவை எதிர்க்கக்கூடும்.

1 mca  phoonகட்சித் தலைவர்கள் அரசுப் பதவிகளை ஏற்கக்கூடாது என்பதை சுவா தொடர்ந்து வலியுறுத்தி வந்தால் அதனால் கட்சியில் உள்சண்டைதான் அதிகரிக்கும் என்று அரசியல் ஆய்வாளர் பூன் விங் கியோங், கினிடிவிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

“சுவா அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தால், வரும் கட்சித் தேர்தலில் மசீச அமைச்சரவைக்குத் திரும்புவதா, வேண்டாமா என்பதே முக்கிய விவகாரமாக விவாதிக்கப்படும்”, என்றாரவர்.

ஆனால், அப்படியே மசீச அமைச்சரவையில் சேர்ந்துகொண்டாலும் முந்தைய அமைச்சரவையில் இருந்ததுபோல் நான்கு அமைச்சர் பதவிகளும் ஏழு துணை அமைச்சர் பதவிகளும் அதற்கு வழங்கப்படுவதற்கு சாத்தியமில்லை.

நஜிப் அறிவித்துள்ள புதிய அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சுத்தான் மசீசவுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, அக்கட்சியில் மேலும் ஒரு அமைச்சருக்கும் இரு துணை அமைச்சர்களுக்கும் பிஎன் இடம் ஒதுக்கிவைத்திருப்பதாகத் தெரிகிறது.

யாருக்கும் அது பற்றிக் கவலை இல்லை

இது ஒருபுறமிருக்க, மசீச அமைச்சரவையில் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் அதைப் பற்றி பொதுமக்கள், குறிப்பாக சீனர் சமூகம் சற்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அமைச்சரவையில் மசீச அமைச்சர்கள் இடம்பெறாதது பற்றி ஒரு சில சீனர் சங்கங்களையும் நிறுவனங்களையும் தவிர்த்து மற்ற சீனர்கள்  கொஞ்சமும் கவலைப்படவில்லை என்று பூன் கூறினார்.

“சீன அமைச்சர்கள் அதில் இருந்தாலும்கூட அவர்களால் அரசாங்கத்தின் நியாயமற்ற கொள்கைகளை மாற்ற இயலாது என்றே பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

“ஆனால், சீனர் சங்கங்களையும் நிறுவனங்களையும் பொறுத்தவரை அமைச்சுகளிடமிருந்து நிதி கிடைக்கலாம் சலுகைகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கக்கூடும்”, என பூன் கூறினார்.

1 mca tangஇன்னொரு விமர்சகர், தாங் ஆ சாய் (வலம்), வேறுவகை கருத்தை முன்வைத்துள்ளார்.  மசீச அரசாங்கத்தில் பங்குபெறாவிட்டாலும்கூட பிஎன் அரசாங்கத்தால் தொடர்ந்து செயல்பட முடியும் என்பதை நஜிப் உணர்த்த விரும்பலாம் என்றாரவர்.

“புதிய அமைச்சரவையும் அரசாங்கமும் நன்றாக செயல்பட்டால் மசீசவின் எதிர்காலம் மேலும் தடுமாற்றம் காணும். ஆளும் கூட்டணிக்கு அது அவசியமில்லை என்ற கருத்து நிலைபெற்றுவிடும்”, என்று தாங் கூறினார். தாங், கோலாலும்பூர் சீன அசெம்ளி மண்டபத்தின் தலைமை செயல் அதிகாரியுமாவார்.

பெரும் தவறு

அமைச்சரவைக்கு ‘வெளியில் இருக்கும்’ தீர்மானத்தின் விளைவுகளை  மசீச எண்ணிப்பார்க்காதது பெரும் தவறாகும் என்றாரவர்.

“அரசுப் பதவிகளை ஏற்பதில்லை என்ற மசீச-வின் முடிவு உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்டது. அதன்வழி அது என்ன சொல்ல வருகிறது? வாக்காளர்களைத் தண்டிக்க விரும்புகிறதா?”, என்றவர் வினவினார்.

பொதுத் தேர்தல் தோல்வியை அடுத்து மசீச அதன் சேவை மையங்களை மூடியது இன்னும் பெரிய தவறாகும் என்றவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மசீச துணைத் தலைவர் லீ கிம் சாய்,  அமைச்சரவையில் சேர்ந்து மக்களுக்குச் சேவை செய்யாவிட்டால் மசீச தேவையற்ற கட்சியாகி விடும் என்று எச்சரித்திருப்பதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.

ஆனாலும், மசீச இன்னும் ஒரு வலுவான கட்சிதான் என்று தாங் குறிப்பிட்டார். அதனிடம் பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மில்லியன் கணக்கில் உறுப்பினர்கள் இருக்கின்றனர். பணியாற்றும் பக்குவமுள்ள சிறந்த கட்சி இயந்திரத்தையும் பெற்றுள்ளது.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டால், தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அமைச்சரவையில் சேர்வதில்லை என்ற மசீசவின் முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டதுதான் என்றாரவர்.

TAGS: