மாற்றரசுக் கட்சி, அரசாங்கம் இரண்டுமே பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தன. இரண்டிலும் தேர்தல்கால கவர்ச்சி அம்சங்கள் நிறைய இருந்தனவே தவிர கொள்கைரீதியான பரிசீலனைகளுக்குக் குறைந்த இடமே கொடுக்கப்பட்டிருந்தது என்கிறார் துங்கு ஜைன் அல் அபிடின் முக்ரிஸ்.
ஜனநாயக பொருளாதார விவகாரக் கழகத்தின் நிறுவனரான அவர், கூடுதல் பொருளாதாரத் தாராளமயத்துக்குப் பாதை வகுக்க “இரண்டு பட்ஜெட்டுகளும் தவறிவிட்டன” என்று கூறினார்.
“இரண்டுமே அலங்காரமாகப் பேசி பொருளாதாரத் தாராளமயத்துடன் உயர்வருமானம் பெறும் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லப்போவதாக அறிவித்துக்கொண்டாலும்கூட அதைச் செய்வதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை”, என்று அந்த நெகிரி செம்பிலான் இளவரசர் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய பொருளாதார சுதந்திரக் கட்டமைப்பு மாநாட்டில் கூறினார்.
“அரசாங்கத்தினதும் மாற்றரசுக் கட்சியினதுமான பட்ஜெட்டுகள் அளவுக்குமீறிய சலுகைகளால் நிரம்பியுள்ளன…..எல்லாமே தேர்தலில் ஆதாயம் பெறுவதை நோக்கமாகக் கொண்டவை.”