காணாமல் போன அல்லது சேதமடைந்த பிறப்பு, திருமண, கல்வி, வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், மலேசிய பாஸ்போர்ட், வாகனமோட்டுவதற்கான அனுமதி, நில உரிமைப் பத்திரம் ஆகியவை குறித்து பொது மக்கள் இனிமேல் போலீஸில் புகார் செய்ய வேண்டியதில்லை.
பிரதமர் துறை செப்டம்பர் 29ம் தேதி வெளியிட்ட 2011ம் ஆண்டுக்கான மூன்றாவது சுற்றறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் புகார்கள், எந்தச் சட்டத்திலும் இடம் பெறாத நிர்வாகம் சாராத நடைமுறை என்பதால் அந்தத் தேவையை ரத்துச் செய்வது என்று ஏப்ரல் மாதம் 6ம் தேதி கூடிய பொதுப் புகார்கள் மீதான நிரந்தரக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசான் றினார்.
2010ம் ஆண்டு போலீசாருக்கு 2.8 மில்லியனுக்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்தன. அதில் 1.1 மில்லியன் அல்லது 40 விழுக்காடு மற்ற அரசாங்க அமைப்புக்களுக்கு மாற்றி விடப்பட்டன என்று அவர் சொன்னார்.
“ஆகவே பெரும்பாலான போலீஸ் புகார்களுக்கு போலீஸ் நடவடிக்கை தேவை இல்லை என்பதை அது காட்டியது.”
“அந்தத் தேவை பொதுமக்களுக்கு சிரமத்தை தருவதோடு திறமையான வாடிக்கையாளர்களுக்கு நட்புறவான பொதுச் சேவையைப் பிரதிபலிக்கவில்லை.”
“அதே வேளையில் அந்த நடைமுறை போலீஸ் புகார்களை கவனிக்க வேண்டிய போலீசாருக்கும் பணிச்சுமை அதிகரிக்கிறது. அந்தத் தேவையினால் போலீஸ் நடவடிக்கைகளுக்கான செலவுகளும் கூடின. போலீஸ் வழங்கும் சேவைக்கும் அது கூடுதல் மதிப்பைத் தரவில்லை,” என்றும் அவர் சொன்னார்.
அந்த நடைமுறை ரத்துச் செய்யப்படுவதைத் தொடர்ந்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, அரசாங்க அமைப்புக்களுக்கு போலீஸ் புகார்களும் சமர்பிக்கப்பட வேண்டிய விஷயங்களை அடையாளம் காணுமாறும் முகமட் சிடிக் எல்லா அரசாங்க அமைப்புக்களைக் கேட்டுக் கொண்டார்.
என்றாலும் இந்த சுற்றறிக்கை போலீஸ் புகார்களை செய்வதிலிருந்து பொது மக்களைத் தடுக்கவில்லை என்றும் அவ்வாறு செய்வதிலிருந்து பொது மக்களை அரசாங்க அமைப்புக்கள் தடுக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
பெர்னாமா