சட்டப் பிரதிநிதிகளைக் கூர்ந்து ஆராய வேண்டியவர்கள் மக்கள்தானே தவிர எம்ஏசிசி அல்ல

dapசட்டம் கேட்டுக்கொண்டால் டிஏபி-இன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் சொத்துவிவரத்தை பொதுவில் அறிவிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், அதை எம்ஏசிசி-இடம் “இரகசியமாக தெரியப்படுத்த வேண்டும்” என்பதை அவர்கள் ஏற்கவில்லை.

“இரகசியமாக” தெரியப்படுத்த எம்ஏசிசி-இன் ஆலோசனை மற்றும் ஊழல் தடுப்பு வாரியம் முன்மொழிந்துள்ள இந்த ஆலோசனை குறைபாடுடையது என டிஏபி விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறினார்.

dap pua“தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை அறிவிப்பது ‘நேர்மையை உறுதிப்படுத்தவும் ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும் உதவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்பதை டிஏபி கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறது.

“என்றாலும், பிஎன்னின் கைப்பாவையாக செயல்பட்டு வந்துள்ள எம்ஏசிசிமீது நம்பிக்கை இல்லை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் வசதியை மீறி வாழ்கிறாரா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை அதனிடம் மட்டுமே விட்டுவிடுவதை நாங்கள் ஏற்பதற்கில்லை”, என புவா ஓர் அறிக்கையில் கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் பிஎன்னில் உள்ள “பெரிய மீன்களை”ப் பிடிப்பதில் எம்ஏசிசி திறமையைக் காண்பிக்கவில்லை. ஆனால், பக்காத்தான் தலைவர்களுக்கு எதிரான பலிவேட்டையை மட்டும் முழு மூச்சாக நடத்தியது.

ஹுலு சிலாங்கூர் இடைத் தேர்தலுக்கு முன்னதாக அப்போதைய எம்ஏசிசி தலைவர் அஹ்மட் சைட் ஹம்டான், சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பகிரங்கமாக அறிவித்ததை புவா சுட்டிக்காட்டினார்.

dap hamdanபின்னர் ஹம்டான் (வலம்) அவ்வாறு சொன்னதற்கு நீதிமன்றத்திலும் பல செய்தித்தாள்களிலும் மன்னிப்பு கேட்டார்.

எம்ஏசிசி, சிலாங்கூரின் பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர்மீது விசாரணை மேற்கொண்டது இன்னொரு எடுக்காட்டு என்று புவா கூறினார். அந்த விசாரணைகளின் விளைவாக தியோ பெங் ஹொக் இறந்து போனார்.

“அதில் வருத்தம்தரும் விசயம் என்னவென்றால், தியோவின் இறப்புக்குப் பொறுப்பான அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டிருகிறார்கள்”.

இச்சம்பவங்கள் எல்லாம் எம்ஏசிசி பிஎன் நலன்காக்கவே பாடுபடுகிறது என்பதைத்தான் காட்டுகின்றன என்றார் புவா. எனவே, அதனிடம் சொத்து விவரத்தை அறிவிப்பதில் பொருளில்லை. அந்த ஊழல்தடுப்பு ஆணையம் பக்காத்தான் ரக்யாட் உறுப்பினர்களைத்தான் விரட்டி விரட்டி ஆராயும், பிஎன் உறுப்பினர்களை எதுவும் செய்யாது.

டிஏபி வழிகாட்டுகிறது

அதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பிரதிநிதிகள் அனைவரும் அவர்களின் சொத்துவிவரத்தை அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்படி பிரதமருக்கு வாரியம் ஆலோசனை கூறலாம் என புவா குறிப்பிட்டார்.

அரசாங்கப் பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட டிஏபி-இன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருமே மே 11-இல் நேர்மையாக நடக்க உறுதிகூறும் ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். சிலாங்கூரிலும் பினாங்கிலும் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்பிருந்தே இப்பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.