இந்தியர்களின் குரல் யார்? : மக்கள் கூட்டணியா? ம.இ.காவா? ஹிண்ட்ராப்பா?

kula-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013.

ம.இ.காவின் கணக்குப்படி 6 லட்சம் பேர் அதன் உறுப்பினர்கள். பி பி பி சொல்கிறது அதனிடம் 3 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று.    ஐ பி எப் பின் விவரப்படி அதனிடம் 4 லட்சம் பேர் இருக்கின்றார்கள். தனேந்திரன் வேறு தன்னிடம் 1 லட்சம் பேர் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார். ஆக மொத்தம்  14 லட்சம் இந்திய வாக்காளர்கள் மலேசியாவில் இருக்கின்றார்கள். அதிகாரபூர்வ இந்திய வாக்களார்களின் எண்ணிக்கை 9.5 லட்சமாக இருக்கும் வேளையில்  இதில் மேலும் 5.5 லட்சம் பேர் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை.  மலேசிய வாக்காளர் எண்ணிக்கை 1 கோடியே 10  லட்சம் பேர் இருக்கும் பட்சத்தில் 14 லட்சம் பேர் அதில் இந்தியர் வாக்காளர்கள் இருக்கின்றார்கள் என்றால் அது அறியாமையின் வெளிபாடன்றி வேறொன்றுமில்லை.

ஒவ்வொரு இந்தியர்கள் சார்புடைய கட்சியும் தன்னிடத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்திய வாக்களர்கள் இருக்கின்றார்கள் என்று பீற்றிக்கொண்டாலும் அது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கப்படவில்லை.

51% வாக்காளர்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தேர்தலுக்குப் பிந்திய அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் கூறும் போது, நியாயப்படி அந்த பெரும்பான்மையில் இந்திய வாக்காளர்களும் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், ம.இ.கா தலைவரோ 70 % இந்தியர்கள் பாரிசானுக்கு ஓட்டு போட்டதாக அடம்பிடித்துச் சொல்கிறார் . உண்மையிலேயே 70% இந்தியர்கள் பாரிசானுக்கு போட்டிருந்தால்   ம.இ.கா நின்ற அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? ஏன் அப்படி நடைபெறவில்லை?

மொத்தம் 27 தொகுதிகளில் நின்று வெறும் 9 இடங்களையே (33%) தக்க வைத்துக்கொண்ட ம.இ.கா எப்படி 70% இந்தியர்கள் பாரிசனுக்கு ஓட்டு போட்டு மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்று மார் தட்டிக்கொள்ள முடியும்?

ஆளும் கட்சியின் ஆதரவு முழுமையாக இருந்தது, அரசு இயந்திரங்கள் அவர்கள் பக்கம் இருந்தன, பணம் தண்ணீராக வாரி இறைக்கப்பட்டது, மக்கள் சக்தி கட்சி, ஐ பி எப் 1, I.P.F 2 , பிபிபி, நல்லகருப்பன் கட்சி, இன்னும் ஊர் பேர் தெரியாத கட்சிகளெல்லாம் அல்லும் பகலும் பாரிசான் வேட்பாளர்களுக்கு உழைத்தும், முழுமையாக இந்தியர்களின் ஆதரவை ம.இ.காவால்  பெற முடியவில்லை. இந்தியர்கள் விழித்துக் கொண்டு மிகவும் தெளிவாக எந்த கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று முன்னமேயே தீர்மானித்து விட்டதால் ம.இ.க அடங்கிப் போனது என்பதுதான் இந்த தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை.

ம.இ.காவின் செயல்பாடுகளில் திருப்தி கொள்ளாத பாரிசான் தனது கவனத்தை ஹிண்ட்ராப் மீது திருப்பி வருங்காலங்களில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிக இடங்களை ஹிண்ட்ராப்பிற்கு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஹிண்ட்ராப் என்கிற ஒரு சக்தி ம.இ.காவிற்கு எதிராக இந்தியர்களின் மாற்று அணியாக அடையாளம் காணப்படும் காலம் வரக்கூடும் அல்லது வந்துவிட்டது.

ஏற்கானவே தெற்கு மாநிலங்களான ஜோகூர், நெகிரி செம்பிலான் , மலாக்கா போன்றவற்றில்  ம.இ.கா பலத்த தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வடக்கு மாநிலங்களான  பேரா, சிலங்கூர், பினாங்கு போன்ற இடங்களில் ஏற்கனவே ம.இ.க துடைத்தொழிக்கப் பட்டு விட்டது.

அடுத்த தேர்தல் வரை ம.இ.கா இருக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இந்த லட்சணத்தில் ம.இ.காவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு  தேர்தல் நடத்தும் காலம் முடிவடைந்து விட்டதனால், அது சட்ட  பூர்வமான கட்சிதானா என்ற ஒரு சந்தேகமும் எழ ஆரம்பித்து விட்டது. இதை நினைவுப் படுத்தியது வேறு யாருமல்ல. தேசிய உதவித் தலைவர் சரவணன்தான் இதைக் கூறியுள்ளார். இந்த வேளயில் அடிக்கடி ஜசெகவை  சீண்டும் ரமணா எங்கு ஓடி ஒளிந்து விட்டார் என்று தெரியவில்லை..

ம.இ.கா மட்டுமே இந்தியர்களின் ஏகபோக பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்பதில் முன்னாள் ம.இ.காவின் தலைவர் ச.சாமிவேலு உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருந்தார். அதை அவர் பதவியில் இருந்த காலம் வரை காப்பாற்றிவிட்டு போய்விட்டார். ஆனால் இப்போது யாரையும் கலந்து ஆலோசிக்காமலேயே பிரதமர் நஜீப் வேதமூர்த்தியை நேரடியாகவே துணை அமைச்சராக்கி இருக்கின்றார் என்றால் அதன் உள்ளர்த்தத்தை ம.இ.காவும் சரி ,இந்திய மக்களும் சரி சற்று ஆழமாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பிரதமர் ம.இ.கா வின் மேல் எவ்வளவு அவநம்பிக்கை வைத்துள்ளார் என்பதனை இது மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.  அதே வேளையில், வேதமூர்த்தி தேர்தலை குழப்பாமல் இருக்கவும், ஓரளவு இந்தியர்களின் ஆதரவை பாரிசான் பக்கம் இழுக்கவும், ம.இ.கா விற்கு இணையாக ஒரு சக்தியை உருவாக்கி பிளவு பட்டுள்ள இந்தியர்களை மேலும் பிளவு படுத்த நஜீப் எடுத்த ஒரு சாணக்கியத்தனமான  முடிவு  இது.

ஒரு வேளை நஜீப்பின் ஆட்சி அடுத்த தேர்தல் வரை தொடருமானால், பாரிசான் நேசனல் கூட்டு, ம.இ.கா தோல்வி அடைந்த இடங்களில் எல்லாம் நட்புக் கட்சிகளான ஐ பி எப் I, ஐ பி எப் II, பி.பி.பி, நல்லக்கருப்பன் கட்சி தனேந்திரன் கட்சி  மற்றும் ஊர் பேர் தெரியாத  கட்சிகளுக்கெல்லாம் இடம் கொடுத்து, இந்திய சமுதாயத்தையே மேலும் கூறு போடக்கூடிய வியூகத்தை வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சரவாவிலும், சபாவிலும் எப்படி அங்குள்ள பூர்வ குடிமக்களை அக்கு வேராக ஆணிவேராக பிரித்து  ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை அங்கீகரித்து ஆட்சியிலும் இடம் பெறச் செய்துள்ள நஜீப்பின் ராஜதந்திரத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ம.இ.காவில் உள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவி ஏற்றுள்ளதால், அவர்களின் நிலைமை நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும்தான் பதில் கூறமுடியுமே தவிர, இந்தியர் பிரச்சனைகளைப் பற்றி  அவர்களால் பேசவோ அல்லது கேள்விகள் எழுப்பவோ முடியாது.

ஜனநாயகச் செயல் கட்சியோ எத்தனையோ முறை நாடளுமன்றத்தில் இந்தியர் நலனுக்காக குரல் கொடுத்து வந்துள்ளது. குறிப்பாக, குடியுரிமைப் பிரச்சனை, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் போன்ற அனைத்தும் நாடாளுமன்றத்தில்  எதிர்க்கட்சியினரான நாங்கள் குரல் கொடுத்தன் பயனாகத்தான் பாரிசன் அரசு ஓரளவுக்கு அசைந்து கொடுத்தது. இந்தியர்களை பிரதிநிதிக்கும் ம.இ.காவோ  அதிகப் படியான வேளைகளில் மௌனியாகவே இருந்துள்ளது.

ஆகவே,  கடந்த காலங்களில் மக்கள் கூட்டணி எப்படி இந்தியர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் போராடியதோ அதே போல இனி வரும் காலங்களில் இந்தியர் பிரச்சனைகளுக்காக  குரல் கொடுக்க மக்கள் கூட்டணியால் மட்டும்தான்  முடியும்.

TAGS: