சாபாவில் உள்ள தோட்ட நிறுவனங்கள் முறையான ஆவணங்கள் வைத்திராத குடியேறிகளை வேலைக்கு வைத்துக்கொள்வது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், அரசாங்கம் கள்ளக்குடியேறிகளுக்கு அடிக்கடி மன்னிப்பு வழங்குவதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் சாட்சியமளித்த ஆம்கார் தோட்ட நிர்வாகி நோகியா சனுசி, குனாக்கில் உள்ள தங்களின் செம்பனை தோட்டத்திலும் இதுதான் நடக்கிறது என்று தெரிவித்தார்.
“பொது மன்னிப்புத் திட்டம் அறிவிக்கப்படும்போது சட்டவிரோத தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் பதிவு செய்து விடுவோம்.
“வேலைக்கு ஆள் தேவைப்படும்போது எங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் உறவினர்களை (கள்ளத்தனமாகக் குடியேறியவர்களை)ச் சேர்த்துக்கொள்வோம்.
“பிறகு சாபா அரசு பொது மன்னிப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்” என்றவர் சொன்னதும் விசாரணை நடைபெறும் கோட்டா கினாபாலு நீதிமன்றத்தில் சிரிப்பொலி அலைமோதியது.
விசாரணை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப் (இடம்) அவரது பிரார்த்தனை பலித்ததா என்று வினவ பலித்தது என்று நோகியா பதிலளித்தார்.
ஆனால், தங்களிடம் வேலை செய்யும் 800 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 60 பேர் மட்டுமே சட்டவிரோத தொழிலாளர்கள் என்பதை நோகியா வலியுறுத்தினார்.
ஐஓஐ நிறுவனத்திலும் இந்தப் பழக்கம் உண்டு என அதன் அதிகாரி லஸ் டவிலா சாட்சியமளித்தபோது தெரிவித்தார்.
ஐஓஐ நிறுவனத்தில் முன்பு சட்டவிரோத தொழிலாளர்கள் இருந்ததுண்டு ஆனால், இப்போது இல்லை என்றாரவர். அவர்கள் எல்லாரையுமே சட்டப்படியான தொழிலாளர்களாக பதிவு செய்து விட்டதாக அவர் சொன்னார்.
லஸும் அவரின் சகாவான நலியா ருடினும், நோகியாவும் தோட்டங்களில் வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறதெனக் கூறினர்.
ஆனால் நோகியா, இப்போது குறைந்தபட்ச சம்பளம் அமல்படுத்தப்பட்டு வருவதால் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தொழிலாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மனோஜ் குறுக்கிட்டு, “அதாவது நீங்கள் இதற்குமுன் போதுமான சம்பளம் கொடுக்கவில்லை, அப்படித்தானே?”, என்று வினவ அதை நோகியா ஒப்புக்கொண்டார்.
அதேவேளை, உள்நாட்டவரைக் கண்டித்தால் “கோபம் கொள்வார்கள்” என்றும் வேலையில் “ஊக்கம் காட்ட மாடார்கள்” என்றும் குறிப்பிட்டார். காலை ஆறு மணி வேலைக்கு ஐந்து மணிக்கு எழுவதும் அவர்களுக்குப் பிடிக்காது.
உள்நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கடுமையான வேலை கொடுத்தால், அந்த வேலையைத் தவிர்க்க முதுகு வலி என்பார்கள் எனவும் நோகியா கூறினார்.
மூவருமே, தோட்டங்களில் 85 விழுக்காட்டு தொழிலாளர்கள் வெளிநாட்டவர்தான் என்றும் அவர்களின்றி தோட்டத்தொழில் முடங்கிப் போகும் என்றும் குறிப்பிட்டனர்.