அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு அன்வார் கலங்கவில்லை

1anwarபொதுத் தேர்தல் மோசடி பற்றிக் குற்றம் சொன்னதை அடுத்து  கைது நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தாலும்,  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்  அதைக் கண்டு அஞ்சி  போராட்டத்தைக் கைவிடமாட்டார்.

இதனை, நேற்றிரவு, திரெங்கானுவின் கோலா இபாயில், ‘இருட்டடிப்பு 505’ பேரணியில் கூடி இருந்த 20,000 பேரிடம் தெரிவித்த அன்வார்,  மக்கள் ஆதரவு உள்ளவரை போராட்டம் தொடரும் என்றார்.

“அதிரடி நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.  அவர்களின் இறுதி இலக்கு யார் என்பதை நாம் அறிவோம்.

“கைது நடவடிக்கைகள் மூலமாக என்னைக் கதிகலங்க வைப்பதுதான் பிரதமர் (நஜிப் அப்துல் ரசாக்) அல்லது உள்துறை அமைச்சரின் (அஹ்மட் ஜாஹிட் ஹமிடி) நோக்கம்  என்றால் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். மக்கள் என்னுடன் இருக்கும்வரை  அச்சம் எனக்கில்லை”, என்றவர் சொன்னதைக் கேட்டு  கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

13வது பொதுத் தேர்தலில் மோசடி நிகழ்ந்துள்ளதாகக் கூறி அதை விளக்குவதற்காக பக்காத்தான் ரக்யாட் நாடு முழுக்க பேரணிகளை ஏற்பாடு செய்து வருகிறது.  அப்பேரணிகளில் ஒன்றுதான் நேற்றிரவு திரெங்கானுவில் நடந்தது.

நேற்றைய பேரணியில் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, உதவித் தலைவர் ஹுசாம் மூசா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

1 anwar3அதில்,  பிகேஆர் உதவித் தலைவரும் பத்து தொகுதி எம்பியுமான தியான் சுவாவும் பேசுவதாக இருந்தது. ஆனால்,  நேற்று, அவர் கோலாலும்பூர் குறைந்த-கட்டண விமான முனையத்தில் போலீசால்  கைது செய்யப்பட்டார்.

நேற்று போலீசார் மனித உரிமை போராளி  ஹரிஸ் இப்ராகிம், பாஸ் தலைவர் தம்ரின் கப்பார் ஆகியோரையும் வெவ்வேறு  இடங்களில் கைது செய்தனர்.

சனிக்கிழமை திட்டமிடப்பட்டிருக்கும் கண்டனப் பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்டதாக நம்பப்படும் அம்மூவரும் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.