அஸ்மின்: கைது நடவடிக்கை மகாதிரிசம் திரும்புவதைக் காண்பிக்கிறது

1 azminஅண்மையில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களும் ஜனநாயக-ஆதரவு சமூக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டது, மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்ட ‘மகாதிரிசம்’ மறுபடியும் தலையெடுப்பதற்கான அறிகுறியாகும் என பிகேஆர் கூறுகிறது.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் காலத்தில் “சிவில் உரிமை பற்றிப் பேசியவர்கள்” தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று பலர் கைது செய்யப்பட்ட நடவடிக்கை, ‘அந்த நாள்’ திரும்பி வருவதைக் காண்பிக்கிறது என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.

“உள்துறை அமைச்சர் (அஹ்மட் ஜாஹிட் ஹமிடி) தமக்கு முன் இருந்தவரைவிட கூடுதலாக செய்ய வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டுகிறார். (பிரதமர்) நஜிப் ‘அழகிய மவுனம்’ கடைப்பிடிக்கிறார். இந்நிலையில் மேலும் பல மாற்றரசுக் கட்சித் தலைவர்களும் சிவிப் உரிமை போராளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்பது உறுதி”, என அஸ்மின் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

நேற்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும் முன்னாள் பத்து பெராண்டாம் எம்பியும் பாஸ் உறுபினருமான தம்ரின் கப்பார் ஆகியோர் தேச நிந்தனை குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டனர். அதே வேளை மாணவ ஆர்வலர் ஆடாம் அட்லி அப்துல் ஹாலிம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

‘உள்துறை அமைச்சின் அடக்குமுறை’

போலீஸ் நடவடிக்கைகள் மூலமாக உள்துறை அமைச்சு “அடக்குமுறை அணுகுமுறையை”க் கையாள்வதாக டிஏபியும் கண்டனம் தெரிவித்தது.

1 azmin2இதுவரை நடந்துள்ள கைது நடவடிக்கைகள் பற்றிக் கருத்துரைத்த செகாம்புட் எம்பி லிம் லிப் எங் (இடம்) அது “பனிப்பாறையின் நுனி மட்டுமே” என்றார்.  டிஏபி தலைவர்கள் போலீசுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளனர் என்றாரவர்.

“போலீசார் அவர்களின் பட்டியலில் உள்ள தலைவர்களின் பெயர்களையும் அவர்கள்மீதான குற்றச்சாட்டையும் தெரியப்படுத்தினால், குறிப்பிட்ட போலீஸ் நிலையத்துக்கு, குறிப்பிட்ட நேரத்தில் நாங்களே செல்வோம்”, என்றவர் சொன்னார்.

பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார்,  அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு பிஎன் சட்டங்களையும் சட்ட அமலாக்கப் பிரிவினரையும் விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்கிறது எனச் சாடினர்.

“தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அனைவருடனும் இணக்கம்  காணப்போவதாகக் கூறினார்கள். ஆனால்,  ஹராக்கா டெய்லி, சுவாரா கெஅடிலான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதும் அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் அவர்களின் சொல்லை அவர்களே மதிப்பதில்லை என்பதைத்தான் காண்பிக்கின்றன”, என்று மாபுஸ் கூறினார்.

TAGS: