ஜாஹிட்: பிஜே பேரணி ‘ஒரு சினமூட்டும் நடவடிக்கை’

1 hamidiஇன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியைக் கையாளும் திறமை போலீசுக்கு உண்டு என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

திட்டமிடப்பட்டுள்ள அப்பேரணி 2012 அமைதிப் பேரணிச் சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றாரவர்.

இன்று மாலை மணி 5-க்கு எம்கோர்ப் மால் அருகில் உள்ள திடலில் அப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்பாட்டாளர்கள் பேரணி நடப்பதை போலீசுக்குத் தெரியப்படுத்தவில்லை.

“அது சினமூட்டும்  நடவடிக்கையாகத்தான் எனக்குப் படுகிறது.போலீசாருக்கு சவால் விடுக்க முனைகிறார்கள். இதனைக் கையாளும் பொறுப்பை போலீஸ் தலைவரிடமே விட்டு விடுகிறேன்”, என ஜாஹிட் ஹமிடி  நேற்றிரவு பெர்னாமா டிவியின் ‘ஹல்லோ மலேசியா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார்.

‘குழப்பம் உண்டுபண்ணாதீர்’

1 hamidi1பேரணியில் கலந்துகொள்வோர் குழப்பத்தை உண்டுபண்ணக்கூடாது என்றும் அமைதியையும் ஒழுங்கையும் குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் அதிகரித்துவருவதை வைத்து புதிய உள்துறை அமைச்ச்சர் கெடுபிடியானவர் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

நேற்றுக்கு முன்தினம் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் இருவரும், சமூக ஆர்வலர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து அவ்வாறு கூறப்பட்டது.

“சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக நடந்துகொள்கிறார்கள், அவ்வளவுதான்”, என்றார்.

போலீசார் சட்டப்படியான நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் குறுக்கிடுவதில்லை என்றும் அவர் சொன்னார்.