நேற்று பிகேஆர் மகளிர் கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்களில் சிலர், அண்மைய தேர்தலில் தங்கள் வேட்பாளர்கள் ‘தற்கொலைப் பணிக்கு’ அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறைப்பட்டுக்கொண்டார்கள்.
பாகாங் பேராளர் முரினி ஹிடாயா அனுவார், “மகளிர் பகுதிக்கு வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போட்டி கடுமையாக இருந்த இடங்கள்தாம் கொடுக்கப்பட்டன”, என்றார்.
போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளை எண்ணி அஞ்சவில்லை என்று கூறிய அவர், கட்சி தேர்தல் இயந்திரம் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும் ஆனால், அது சரியாக செயல்படவில்லை என்றும் சொன்னார்.
“போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளுக்கு அனுப்பி எங்களைக் காவு கொடுக்காமல், தேர்தல் இயந்திரம் நன்றாக செயல்படுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.
தமக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் விவரித்தார். பகாங்கில் பாயா புசார் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தாம் நிறுத்தப்பட்டதாக அவர் சொன்னார். அது போட்டிமிகுந்த ஒரு தொகுதி. அதில் பத்து பெல்டா குடியேற்றப் பகுதிகள் இருக்கின்றன.
“அந்தக் குடியிருப்புகளுக்குச் சென்றபோதுதான் தெரிந்தது- நம் கட்சி இருப்பதையே அங்குள்ளவர்களில் பலர் அறிந்திருக்கவில்லை என்பது.
ஆண் ஆதிக்கமா?
“இப்படிப்பட்ட நிலைமையில் எப்படி வெற்றுபெறுவது?”, என்றவர் வினவினார்.
அது மட்டுமல்ல. வழக்கமாக மகளிருக்குக் கொடுக்கும் இடங்கள்கூட இம்முறை ஆண் வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
பகாங்கில் செமாம்பு, பேராக்கில் புக்கிட் சண்டான் ஆகியவை அப்படிப்பட்ட இடங்களாகும் என்று குறிப்பிட்டவர், அந்த இடங்களில் மகளிர் பகுதி வென்றிருக்கும் என்றார்.
பிகேஆர் மகளிர் வேட்பாளர்கள் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டதில் முன்னதில் மூன்றிலும் பின்னதில் எட்டிலும் மட்டுமே வெற்றி பெற்றனர்.
பேரா பேராளர் ஜுனாய்டா ஜமாலுடின், தம் மாநிலத்தில் போட்டியிட்ட பிகேஆர் பெண் வேட்பாளர்கள் அனைவருமே தோற்றுப்போனார்கள் என்றார்.
கடைசி நேரத்தில் வேட்பாளர்களை முடிவு செய்ததுதான் இதற்கு முக்கிய காரணமாகும். அதன் விளைவாக ஆயத்தப் பணிகளை விரைவாக செய்து முடிக்க இயலவில்லை என்றார்.
‘முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடுங்கள்’
மகளிர் பகுதி விவாதங்களை முடித்துவைத்து உரையாற்றிய பிகேஆர் மகளிர் தலைவர் ஸுரைடா கமருடின் (இடம்), துணிச்சலாகக் கருத்துரைத்த பேராளர்களைப் பாராட்டினார். அவர்கள் தத்தம் மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்று பணியைத் தொடர வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
கட்சித் தேர்தலில் மகளிர் முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடுவதை அவர் ஊக்குவித்தார்.
தேர்தல் தோல்விக்கு வேட்பாளர்களைக் குறை சொல்ல முடியாது. தேர்தல் இயந்திரம் நன்றாக வேலை செய்யாவிட்டால் அவர்கள்தான் என்ன செய்வார்கள் என்றாரவர்.
அதற்கு பெயர் தற்கொலை அல்ல,கொலை. நீங்கள் தோற்க வேண்டும் என்று அனுப்பிய தொகுதிகள் ,அம்னோவிலும் இதுதான் நடந்தது,பாவம் . எல்லா சுயேச்சைகளும் LEBEH
இதுபோன்ற தேர்தல் தோல்விகள், இனி வரும் தலைமுறையினருக்கு, போட்டிகள் என்பது சவால்கள் என்பதை தெளிவுபடுத்த, நீங்கள் செய்த ஒரு தியாகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சேவை மனப்பான்மையை ஒரு படி உயர்த்தி தொடர்ந்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.