சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு எங்கே?

bdul-Khalid-Ibrahimநாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தல் முடிவுற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. மத்திய அரசாங்கம் அமைக்கப்பட்டு விட்டது. பல மாநிலங்கள் அவற்றின் மாநில ஆட்சிக் குழுவை அமைத்து விட்டன. ஆனால், சிலாங்கூர் மாநிலத்தில் இன்னும் ஆட்சிக் குழு அமைக்கப்படவில்லை.

சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நியமனம் பெற்று விட்ட காலிட் இப்ராகிம் இன்னும் ஏன் ஆட்சிக் குழு அமைக்காமல் இருக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு பகிரங்கமாக தெரியப்படுத்தாமல் நொண்டித்தனத்திற்கு வைத்தியம் பார்க்க ஜெர்மனிக்கு சென்றி விட்டதாக கூறப்படுகிறது.

வசதி படைத்த காலிட் இப்ராகிம் வைத்தியம் செய்து கொள்ள ஜெர்மனிக்கு போக முடியும். வசதியற்ற சிலாங்கூர் மாநில மக்களுக்கு வைத்தியமும் சேவையும் செய்வதற்காக இம்மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் சேவர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பில் இன்னும் மந்திரி புசாரால் நியமிக்கபடவில்லை.

பொறுப்பேற்றுக் கொள்வதற்கு தகுதியான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லையா? அல்லது, பொறுப்பேற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் திறமை மந்திரி புசாருக்கு இல்லையா? அல்லது, வெற்றி பெற்ற மக்கள் கூட்டணி பங்காளிகள் இனவாத சேற்றில் மாட்டிக் கொண்டு ஒருவரை ஒருவர் அச்சேற்றில் அமுக்கிவிடும் விளையாட்டில் திளைத்திருக்கின்றனரா? அல்லது, சட்டத்திற்கு அப்பாற்பட்ட தடைகள் ஏதேனும் இருக்கின்றனவா? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு மந்திரி புசார் காலிட் இப்ராகிம்முக்கு உண்டு என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

மக்களின் தீர்ப்பை ஏற்று அதன்படி நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு ஆட்சியில் இருப்பவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மாநில அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சொற்களுக்கும், நிறுத்தல் குறிகளுக்கும் ஏற்ப அவர்கள் தங்களுடைய கடமையை ஆற்ற வேண்டும்.

சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டப் பிரிவு 53(2)(b)யின் கீழ் மந்திரி புசாரின் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே 10 பேருக்கு மேற்போகாமலும், 4 பேருக்கு குறையாமலும் இதர உறுப்பினர்களை ஆட்சிக்குழு உறுப்பினராக மாநில சுல்தான் நியமிக்க வேண்டும். (“53(2)(b) he [Sultan] shall on the advice of the Menteri Besar appoint not more than ten or less than 4 other members from among the members of the Legislative Assembly.)

மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மேற்கூறப்பட்ட சட்டவிதியின்படி மாநில சுல்தானுக்கு ஆலோசனை கூறியுள்ளாரா இல்லையா என்பதை அவர் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி ஆலோசனை கூறியிருந்தால், என்ன நடந்தது என்பதையும், ஆலோசனை கூறாமல் இருந்திருந்தால், ஏன் என்பதையும் அவர் தெளிவுப் படுத்த வேண்டும். எக்காரணத்திற்காகவும் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இக்கடமையை ஆற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால், அவர் அதனைத் தெரிவிக்க வேண்டும். ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் அவர் இருந்தால், ஒன்றை அவர் தங்குதடையின்றி செய்யலாம்: பதவி துறத்தல்.

மந்திரி புசாருக்காக மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. மக்களுக்காக மந்திரி புசார் காத்திருக்க வேண்டும். அதுதான் மக்களாட்சி கோட்பாடு!