மற்ற பொது அமைப்புக்களைப் போன்று மலாய் ஆட்சியாளர்களும் பொது மக்களுடைய ஆழமான ஆய்வுக்கு உட்பட்டவர்களே என அரசியலமைப்பு நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார். அது எந்த வகையிலும் ஆட்சியாளர்களுக்கும் மரியாதை அளிக்கவில்லை எனக் கருதப்படக் கூடாது என்றார் அவர்.
ஆட்சியாளர்களுடைய அடைவு நிலையையும் அவர்கள் தங்களது அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்துவதையும் மதிப்பீடு செய்வதற்கு வரி செலுத்துவோருக்கு எல்லா உரிமையும் உண்டு என அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளரான அவர் சொன்னார்.
“இஸ்லாமியக் கண்ணோட்டாத்தில் பார்த்தால் இன்னும் கடுமையான தரத்தை ஒருவர் காண முடியும். அங்கு ஒருவர் எழுந்து நின்று கலீப் ஒமாரை நோக்கி, தமது கத்தியைக் கொண்டு அவரைத் திருத்தப் போவதாக கூறினார்.”
“1948ம் ஆண்டுக்கான தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் அரசர் அமைப்பு முறையை ரத்துச் செய்ய வேண்டும் என வாதாடாத வரையில் ஆட்சியாளர்களை விமர்சனம் செய்யலாம்”, என அஜிஸ் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மலேசியாகினியின் பாஹாசா மலேசியா பதிப்பில் வெளியான தமது கருத்துக்கள் சிலாங்கூர் சுல்தானுக்கு மரியாதை அளிக்கவில்லை எனக் கூறி உத்துசான் மலேசியா நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி குறித்து அஜிஸ் கருத்துரைத்தார்.
சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகார மன்றம் மேற்கொண்ட சோதனை தொடர்பில் சுல்தான் தலையிட்டது “வழக்கத்திற்கு மாறானது” என அப்துல் அஜிஸ் அதில் வருணித்திருந்தது சர்ச்சைக்குரிய விஷயம் என அந்த ஏடு குறிப்பிட்டது.
சிலாங்கூரில் இஸ்லாத்துக்குத் தலைவர் என்னும் முறையில் சுல்தானுடைய எந்த ஒரு தலையீடும் இஸ்லாத்துக்கு ஏற்பவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என அஜிஸ் சொன்னதாகவும் உத்துசான் செய்தி குறிப்பிட்டது.