பேரணி தொடர்பில் பக்காத்தான் தலைவர்கள் நால்வர்மீது குற்றச்சாட்டு

pakatanபக்காத்தான் தலைவர்கள் நால்வர்- பேராக்கில் இருவர், நெகிரி செம்பிலானில் ஒருவர், பினாங்கில் ஒருவர்- மாற்றரசுக் கட்சி பேரணி  நடத்தியதன் தொடர்பில் அந்தந்த மாநில செஷன்ஸ் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.  பேரணி பற்றி 10 நாள்களுக்கு முன்கூட்டியே போலீசுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என 2012ஆம் அமைதிப் பேரணி சட்ட(பிஏஏ) த்தின்கீழ் அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது.

பினாங்கில், மே 9-இல்,  போலீசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் பத்து கவானில் 505 பேரணியை ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாநில பக்காத்தான் நிர்வாக செயலாளர் ஒங் இயு லியோங் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

மே 9-இல், ஈப்போவில் ஜாலான் உசேனில் உள்ள  சின் வூ மண்டபத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்ததாக டிஏபி ஈப்போ தீமோர் எம்பி தாமஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஈப்போவில் மே 11-இல் இன்னொரு பேரணி ஏற்பாடு செய்ததற்காக பிகேஆரின் முகம்மட் அனுவார் சக்கரியாமீது குற்றம் சாட்டப்பட்டது.

pakatan ongநெகிரி செம்பிலானில், மே 17-இல், சிரம்பான் பேரணியை ஏற்பாடு செய்த  மாநில பிகேஆர் இளைஞர் தலைவர் நஸ்ரி யூனுஸ்மீதும் அதேபோன்றதொரு குற்றச்சாட்டு.

எல்லாருமே குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

சூ-வும் அனுவாரும் ரிம4,000 பிணைப்பணம் ஒரு ஆள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் வழக்கு ஜூலை 19-இல் விசாரணைக்கு வருகிறது.

பட்டர்வர்த் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மட் தர்மிஸி, பிணை ஏதுமின்றி ஒங்கை (வலம்) விடுவித்தார். அவர்மீதான வழக்கு ஜூலை 27-இல் விசாரிக்கப்படும்.

 ‘கடைசிவரை போராடுவோம்…’

பிகேஆரில் முழுநேரப் பணியாளரான ஒங், 44, “கடைசிவரை வழக்காடுவோம்…..மக்கள் அமைதியாக ஒன்றுகூடுவதை அதிகாரிகள் மறுக்க முடியாது”, என்றார்.

ஒங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கூடினபட்சம் ரிம10,000 அபராதம் விதிக்கப்படலாம்.

பக்காத்தான் உறுப்பினர்கள் பலர், அவருக்கு ஆதரவு தெரிவிக்க நீதிமன்றம் வந்திருந்தனர்.

மாநில பக்காத்தான் தலைவர்களும் அங்கு இருந்தனர்.

பினாங்கில், முதலில் புக்கிட் மெர்தாஜாம் எம்பிஎஸ்பி அரங்கில்தான் பேரணி நடப்பதாக இருந்தது. இறுதி நேரத்தில் அதை பத்து கவான் அரங்கத்தில் நடத்த முடிவானது.

பத்து கவான் பேரணி பற்றி புக்கிட் மெர்தாஜாம் ஓசிபிடி-இடமும் நிப்போங் தெபால் போலீஸ் தலைமையகத்திலும் முன்கூட்டியே தெரிவித்து விட்டதாக ஓங் கூறினார்.