மின்தடை ஏற்பட்ட மேலும் ஒரு இடம் பற்றி பிகேஆர் போலீசில் புகார்

1 rafiziபொதுத் தேர்தலின்போது கெடாவில் ஒரு வாக்களிப்பு மையத்தில் நிகழ்ந்த மின் தடை குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டிருப்பதாக  பிகேஆர்  இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று தெரிவித்தார்.

கெடா, சிடிமில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டதாக  ரபிஸி கூறினார்.

அது கூலிம் பண்டார் நாடளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்களிப்பு மையமாகும்.

இதைப் பற்றி சிடிம் பள்ளி ஒன்றில் இருந்த பிகேஆர் தேர்தல் முகவர் போலீசில் புகார் செய்தார். வாக்குகள் எண்ணப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் மட்டும்தான் மின் தடை ஏற்பட்டது என்றும் மற்ற இடங்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

1 rafizi1“தேர்தல் நடத்தப்படுவதில் இப்படிப்பட்ட குறைபாடுகள் நிகழ்ந்திருப்பதைச் சொன்னால் அக்குற்றச்சாட்டுகளைக் கிண்டல் செய்கிறார் தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்.  எந்த அடிப்படையில் அவர் இவ்வாறு கிண்டல் செய்கிறார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்”, என ரபிஸி கேட்டுக்கொண்டார்.

மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றிக் கருத்துரைத்த வான் அஹ்மட், எந்த வாக்களிப்பு மையத்திலும் மின் தடை ஏற்படவில்லை என்று அடித்துக் கூறினார். அது மட்டுமல்ல, மின் வெட்டைக் காண்பிக்கும் சில படங்கள் தேர்தலுக்குமுன்பே எடுக்கப்பட்டவை என்றும் தேர்தல் ஆணையத்தையும் தேர்தல் நடைமுறையையும் குறையுள்ளதாகக் காட்டுவதே அதன் நோக்கமாகும் என்றும் கூறினார்.