பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காப்பார், எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம்,சமூக ஆரவலர் ஹிஷாமுடின் ரயிஸ், மாணவப் போராளி சஃபான் ஆனாங் ஆகியோர் தேச நிந்தனை கருத்துகளைத் தெரிவித்தார்கள் என இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இன்று முன்னேரம் கேஎல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட தியன் சுவா, தம்ரின், ஹேரிஸ், சஃபான் ஆகிய நால்வரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
1948,தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1) (பி) -இன்கீழ் அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
நேற்றிரவே கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த ரய்ஸ், இன்று காலை நீதிமன்றத்தில் தம்மைத் தாமே ஒப்படைத்துக் கொண்டார். அவர் அதே நீதிமன்றத்தில் தனியே குற்றம்சாட்டப்பட்டார்.
அவரும் குற்றச்சாட்டை மறுத்தார்.
அவர்கள் மே 13-இல், கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் இரவு மணி 8.55-க்கும் 11.15-க்குமிடையில் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
அவர்களின் பேச்சுகள் சினமூட்டக்கூடியனவாகவும் அரசாங்கத்தைச் சட்டவிரோதமாகக் கவிழ்க்க தூண்டிவிடுவனவாகவும் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரையும் ரிம 5,000 பிணைப்பணத்தில் விடுவிக்க நீதிமன்றம் முன்வந்தது. ஆனால், சஃபான் (வலம்), “எதிர்ப்பு”த் தெரிவிக்கும் அடையாளமாக பிணையில் வெளிவர மறுத்தார். எனவே, அவர் சுங்கை பீசி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர்கள்மீதான வழக்கு ஜூலை 2-இல் விசாரணைக்கு வரும்.