மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, ஷா ஆலமில் விலைமிக்க இரண்டு வீட்டு மனைகளையும் ஒரு வீட்டையும் பெற்றதில் ஊழல் செய்துள்ளார் என்ற தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ளது.
நீதிபதி அபு சாமா நோர்டின் தலைமையில் கூடிய மூவரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமுகமாக அத்தீர்ப்பை வழங்கியது. அதில் இருந்த மற்ற இருவர், நீதிபதி அஸஹார் முகம்மட்டும் ஆசியா அலியும் ஆவார்கள்.
தீர்ப்பை வாசித்த நீதிபதி அஸஹார், ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மொஹ்தாருடின் பாகி (இப்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி) வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக தாங்கள் நினைக்கவில்லை என்றும் எனவே, மேல்முறையீட்டுக்கு கீரின் வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களைத் தள்ளுபடி செய்வதாகவும் கூறினார்.
விண்ணப்பதாரர், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின்படி குற்றவாளிதான் என்பதில் திருப்தி கொள்வதாக அவர் சொன்னார்.
“விசாரணை செய்த நீதிபதி, சந்தேகத்துக்கிடமின்றி அவர் குற்றவாளிதான் என்று அளித்த தீர்ப்பு சரியானதே”, என்றாரவர்.
உயர் நீதிமன்றம், 2011, டிசம்பர் 23-இல், கீருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதித்ததுடன் குறிப்பிட்ட சொத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
“அத்தீர்ப்பை நாங்களும் ஏற்கிறோம்”, என்று அபு சாமா குறிப்பிட்டார்.
கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கீர் பணித்திருப்பதால் தீர்ப்புக்கு தடையாணை விதிக்க வேண்டும் என அவரின் வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா விண்ணப்பித்துக் கொண்டார்.
“மேல்முறையீட்டை நாளை பதிவு செய்வோம்”, என்றாரவர்.
அரசுத்தரப்பு வழக்குரைஞர் டுசுகி அஹ்மட், முறையீட்டைக் காரணம் காட்டி தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
ஆனால், நீதிபதி அபு சாமா, கீர் முறையீடு செய்வதால் தீர்ப்பை நிறுத்திவைக்க இசைந்தார்.
சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிங்கள் . உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும் .
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இவனே இப்பிடீன மற்ற அம்னோ தலைவர்கள்?