பிஎன் கூட்டணியில் காணப்படுகின்ற ‘பலவீனத்தை’ அண்மைய 13வது பொதுத் தேர்தல் அம்பலப்படுத்தி விட்டதாக அம்னோ பூலாய் எம்பி நூர் ஜஸ்லான் கூறுகிறார்.
தேர்தல் பிரச்சாரச் செய்திகளை வழங்குவதற்கு பிஎன் -னைக் காட்டிலும் பக்காத்தான் ராக்யாட் சமூக ஊடகங்களை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது என அவர் கோலாலம்பூரில் சொன்னார்.
பொதுத் தேர்தலுக்குப் பிந்திய நிலவரம் மீதான கருத்தரங்கில் பேசிய அவர், “இணையம் காரணமாக பக்காத்தான் கட்சிகள் தங்கள் செய்திகளை சிறந்த முறையில் வழங்கின,” என்றார்.
அந்தக் கருத்தரங்கை கோலாலம்பூரில் ஹோட்டல் ஒன்றில் மலேசிய அந்நிய நிருபர்கள் சங்கம் ஏற்பாடு
செய்திருந்தது.
“நாம் கடந்த காலத்தில் மாநகரங்களில் மட்டும் ஆதரவை இழந்தோம். இப்போது நாம் பகுதி நகர்ப்
புறங்களில் கூட ஆதரவை இழந்து வருகிறோம். ஆகவே நாம் நமது தேர்தல் வியூகத்தை மறு ஆய்வு
செய்ய வேண்டும்,” என்றார் நூர் ஜஸ்லான்.
பிஎன் தனது பலவீனங்களைச் சரி செய்வதற்கு வியூகங்களை மாற்றத் தவறினால் மலேசியா தொடர்ந்து
‘பிளவுபட்ட நாடாகவே’ இருக்கும் என அவர் எச்சரித்தார்.
“நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் இடைவெளி தொடர்ந்து பெரிதாகும்,” என்றார்
அவர்.
சீனர் ஆதரவை இழந்தது அம்னோவே தவிர மசீச அல்ல
ஆளும் கூட்டணியிலிருந்து சீனர் வாக்குகள் விலகிச் சென்றது பிஎன் பிரச்னை அல்ல. அது அதன்
சீனர் அடிப்படை உறுப்புக் கட்சியான மசீச-வை பாதித்துள்ள விவகாரமாகும் என நூர் ஜஸ்லான்
கருதுகிறார்.
“அது உண்மையில் மசீச பிரச்னை,” என அவர் வாதாடினார்.
என்றாலும் சீனர் வாக்குகள் பிஎன் -னுக்கு எதிராக திசை மாறியதற்கும் மசீச-வுக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை என அந்தக் கருத்தரங்கில் உரையாற்ரிய டிஏபி குளுவாங் எம்பி லியூ சின் தொங் கூறினார்.
“ஏனெனில் மசீச ‘1990ம் ஆண்டு தொடக்கம் பொருத்தமற்றதாகி விட்டது,” என்றார் அவர்.
“1990 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சீன சமூகம் மசீச-வுக்கு வாக்களிப்பதை நிறுத்தி விட்டதாக நான்
எண்ணுகிறேன். அத்துடன் அந்தக் கூட்டணியின் சார்பில் சீனர் வாக்குகளை கவருவதற்கு அம்னோ
பாடுபட்டு வந்தது,” என லியூ வாதாடினார்.
“1991ம் ஆண்டு டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்த 2020 இலட்சியம் நடுநிலை சீனர்களுக்கு
வாய்ப்பைக் கொடுத்தது. அந்த சமூகத்தை கவருவதற்கு அம்னோ தலைவரே எப்போதும் முயன்று
வந்துள்ளார்,” என அவர் சொன்னார்.
2005ம் ஆண்டுக்குப் பின்னர் அம்னோவுக்கான சீனர் ஆதரவு சரியத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட லியூ
அதற்கு 2005ம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவையில் மலாய் உரிமைகள் பிரச்னையும் புதிய
பொருளாதாரக் கொள்கையும் கடுமையாக விவாதிக்கப்பட்டதே காரணம் என்றார்.
“அது தொடக்கம் சீனர் இந்தியர் ஆதரவை அம்னோ இழக்கத் தொடங்கியது. ஆதரவை இழந்தது
அம்னோவே தவிர மசீச அல்ல,” என்றும் லியூ குறிப்பிட்டார்.
சரியாக சொன்னிர்கள் எம் பி நூர் ஜாஸ்லான் அவர்களே உங்கள் இந்த கருது வரவேற்க படவேண்டும் .