பலிகடா ஆக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கிறார் கீர்

khirபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கம்  கைச்சுத்தமானது எனக் காண்பித்துக்கொள்ள தாம் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ.

அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 12-மாதச் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியதை அடுத்து இன்று தம் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்த கீர், கூட்டரசு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டாலும் தாம் “நம்பிக்கை இழந்துவிட்டதாக”க் குறிப்பிட்டிருந்தார்.

“என்னைச் சிறையிட்டு அதன்வழி நஜிப்பின் அரசு வெளிப்படையானது, ஊழலை எதிர்க்க உறுதி பூண்டுள்ளது என்பதைக் காண்பித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பது பற்றிக் கவலைப்படவில்லை. நடப்பது நடக்கட்டும்”, என்றாரவர்.

khir 1கீர், ஒரு வீட்டையும் வீட்டு மனைகளையும் மதிப்புக் குறைக்கப்பட்ட விலையில் வாங்கியதன் மூலமாக ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

“சொத்துகளுக்கு உரிய விலை கொடுக்கப்படவில்லை என்றால் அவற்றுக்கு உரிய விலைதான் என்ன என்று என் வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா (வலம்)  கேட்டார்.

“அக்கேள்விக்கு உயர் நீதிமன்ற நீதிபதியோ மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளோ பதில் அளிக்கவில்லை. இதிலிருந்தே எனக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்பது தெரிகிறது”, என்றாரவர்.

‘தெளிவான தீர்ப்பு’ தேவை

கூட்டரசு நீதிமன்றத்தில் தாம் என்னதான் ஆதாரங்களை முன்வைத்தாலும் தம்மீதான குற்றச்சாட்டு நிலைநிறுத்தப்படும் என்றே கீர் நம்புகிறார். ஆனால், நீதிபதி வழங்கும் தீர்ப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்றவர் விரும்புகிறார்.

“அங்கு நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பு தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அப்போதுதான் என்னைப் போன்ற அரசுப் பணியாளர்கள் பலிகடா ஆக மாட்டார்கள்.அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்கப்பட மாட்டார்கள்”.

கீர் தாம் ஊழலில் ஈடுபடவில்லை என்று அடித்துக் கூறினார். குறிப்பிட்ட சொத்து “சொந்த உழைப்பில்” வாங்கியது என்றார்.

தம் வழக்கில் சாட்சியம் அளித்தவர்கள் தம்மைப் பிடிக்காதவர்கள் அல்லது தமக்கெதிராக சாட்சியமளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் என்றவர் கூறினார்.

“என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் நான் ஊழல் செய்யவில்லை, அதுதான் உண்மை”, என்றவர் வலியுறுத்தினார்.