சாப்வான் இரண்டு நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் விடுதலை

safwanமாணவர் போராளி முகமட் சாப்வான் அனாங், 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகை செலுத்திய பின்னர் இன்று  விடுவிக்கப்பட்டதாக அவரது மனைவி மஸ்துரா அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மணி 10.30 வாக்கில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் சாப்வானை அவரது இளைய  சகோதரர் ஜாமீனில் எடுத்ததாக மஸ்துரா சொன்னார்.

Solidariti Mahasiswa Malaysia அமைப்பின் தலைவரான சாப்வான் மீது 1948ம் ஆண்டுக்கான தேச  நிந்தனைச் சட்டத்தின் கீழ் மே 29ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

அவருடன் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, முன்னாள் பத்து பெரண்டாம் எம்பி தாம்ரின்
காபார், சமூகப் போராளிகளான ஹாரிஸ் இப்ராஹிம், ஹிஷாமுடின் ராயிஸ் ஆகியோர் மீதும் தேச
நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் அனுமதித்தது. ஆனால் எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில் சாப்வான் அதனை ஏற்க மறுத்து விட்டார்.

“சிறைச்சாலைக்குள் இருப்பதுடன் ஒப்பிடுகையில் தாம் வெளியில் நிறையச் செய்ய முடியும் என
சாப்வான் நம்புகிறார்,” என மாஸ்துரா மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

தமது கணவர் வீட்டில் ஒய்வு எடுத்துக் கொண்ட பின்னர் புத்ராஜெயாவில் வெள்ளிக் கிழமை
தொழுகைக்குப் பின்னர் உள்துறை அமைச்சுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில்
மற்ற மாணவர் போராளிகளுடன் கலந்து கொள்வார் என்றும் அவர் சொன்னார்.

அரசியல்வாதிகளும் போராளிகளும் கைது செய்யப்படுவதை ஆட்சேபித்து அவர்கள் அமைச்சிடம்
மகஜர் ஒன்றைச் சமர்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.