கடந்த 11 நாட்களில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த மூன்றாவது நபர் கருணாநிதி

PDRMபொறியிலாளர் பி கருணாநிதி கடந்த இரண்டு வாரங்களில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த  மூன்றாவது நபர் ஆவார். அவரது மரணம் பற்றி நேற்றிரவு தம்பினில் உள்ள அவரது  குடும்பத்தாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

நேற்றிரவு மணி 9.45 வாக்கில் தொலைபேசி வழி அந்தத் தகவல் கருணாநிதி குடும்பத்துக்கு  தெரிவிக்கப்பட்டது என முன்னாள் காப்பார் எம்பி எஸ் மணிவாசகம் இன்று கூறினார்.

தம்பின் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இரவு 7 மணி வாக்கில் கருணாநிதி ‘திடீரென மரணமடைந்ததாக’ குடும்பத்தாரிடம் கூறப்பட்டது என்றார் அவர்.

மணிவாசகம் இன்று காலை குடும்பத்தாருடன் சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாபார் மருத்துவமனைக்குச் சென்றார். கருணாநிதியின் உடம்பில் காயங்களைக் குடும்பத்தினர் கண்டதாக அவர் சொன்னார்.

“சடலத்தைப் பார்ப்பதற்கு இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நான் குடும்ப உறுப்பினர் இல்லை என்பதால் நான் அனுமதிக்கப்படவில்லை. உடலை சோதிக்குமாறு நான் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன்.”

“சடலத்தை நகர்த்துவதற்கு குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சடலம் வைக்கப்பட்டிருந்த தட்டில் ரத்தம் காணப்பட்டது,” என மணிவாசகம் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

கருணாநிதியின் கைகளில் காயங்களையும் தலையில் ரத்தத்தையும் கண்டதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது கருணாநிதியின் சகோதரர் பி ஈழம் ( P IIam) கூறினார்

“அவரது தலையின் பின்புறத்திலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவரது இடது, வலது கைகளில் காயங்கள் காணப்பட்டன.

இன்று பிற்பகல் ஒரு மணி வாக்கில் சவப் பரிசோதனை நடந்து கொண்டிருப்பதாகவும் உடலை இன்னேரம் குடும்பத்தினர் பெற்றுக் கொள்வர் என்றும் மணிவாசகம் சொன்னார்.PDRM1

“நாளை சிறப்புப் பிரார்த்தனைக்காக கருணாநிதி கொல்லப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு வெளியில் சடலத்தை குடும்பத்தினர் கொண்டு செல்வர்,” என அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன் போலீசிலும் புகார் செய்வர்.

கருணாநிதி பிரிந்து சென்ற தமது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் பார்ப்பதற்காகச் சென்றதாகவும் அங்கு கைகலப்பு ஏற்பட்டதாகவும் மணிவாசகம் தெரிவித்தார்.

பின்னர் கருணாநிதி அந்தச் சம்பவம் மீது போலீசில் புகார் செய்யச் சென்றார். ஆனால் அங்கு அவர் கைது செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.

“காயம் விளைவித்ததாக’ தம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீது மே 31ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

“அந்தச் சமயத்தில் குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருந்தார்கள். நீதிமன்றத்தில் இருந்த போது அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.”

கருணாநிதிக்கு  நாளை ஜாமீன் வழங்கப்படவிருந்தது

கருணாநிதிக்கு  4,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகையை அவரால் உடனடியாகத் திரட்ட முடியவில்லை.

திங்கிட்கிழமை ஜாமீன் தொகையைச் செலுத்த குடும்பத்தினர் எண்ணியிருந்தனர். ஆனால் அவரது மரணம் பற்றி அவருக்கு நேற்றிரவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடியை கேட்டுக் கொள்கிறேன். கருணாநிதி  நன்கு கல்வி கற்ற மனிதர். பொறியிலாளர். அவருக்கு குற்றப்பதிவுகள் ஏதுமில்லை. அது சிறிய குடும்பத் தகராறு தான்.”

“இது இன்னொரு தர்மேந்திரன் விவகாரமாகி சம்பந்தப்பட்டவர்கள் மேசை வேலைக்கு அனுப்பப்படக் கூடாது.”

“இது இரட்டை வேடம். போலீசார் கொலை செய்தால் மேசை வேலைக்கு மாற்றப்படுகின்றனர். மற்றவர்கள் செய்தால் குற்றம் சாட்டப்படுகின்றனர்,” என மணிவாசகம் சொன்னார்.

வேலையில்லாத 40 வயது ரமேஷ் மே 26ம் தேதி பினாங்கு போலீஸ் நிலையம் ஒன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் கல்லீரல் கோளாறினால் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

31வயதான என் தர்மேந்திரன் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் மே 21ம் தேதி இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் சுவாசக் கோளாறினால் இறந்ததாக போலீசார் கூறினர்.

என்றாலும் சவப்பரிசோதனையின் போது அவர் துன்புறுத்தப்பட்டதற்காக அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் அந்த வழக்கை போலீசார் கொலை என வகைப்படுத்தியுள்ளனர்.

அவரது உடம்பில் 52 காயங்கள் இருந்தது என நேற்று வெளியிடப்பட்ட முழுச் சவப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.