யாங் டி பெர்துவான் அகோங் உரை குறித்தும் தேர்தல் முடிவுகள் மீதும் மலேசியர்கள் கேள்வி எழுப்புவதிலும் எந்தத் தவறும் இல்லை என அரசமைப்பு நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி சொல்கிறார்.
ஏனெனில் அவ்விரு நடவடிக்கைகளும் கூட்டரசு அரசமைப்பில் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளாகும் என்றார் அவர்.
“இந்த நாட்டில் அரசமைப்பு தான் உச்ச சட்டமாகும். அகோங் உட்பட ஒவ்வொருவரும் அதற்கு உட்பட்டவர்களே.”
“அகோங் உட்பட யாருக்கும் நாட்டின் சட்டங்கள், அரசமைப்பு ஆகியவற்றின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மறுக்கும் அதிகாரம் கிடையாது,” என அப்துல் அஜிஸ் மலேசியாகினியிடம் கூறினார்.
“அதில் அரசமைப்புக்கு ஏற்ப செய்யப்படும் வரையில் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்புவதும் அடங்கும்.”
கடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தல் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கு அகோங் உரையை கூட்டரசு அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறிய பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை கண்டித்து நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு அப்துல் அஜிஸ் பதில் அளித்தார்.
அகோங் உரையை தயாரிப்பதில் அரசாங்கத்திற்கு பங்கு இருப்பதை ஒப்புக் கொண்ட ரஹ்மான், அகோங் அதனை ஒப்புக் கொள்ளா விட்டால் மாற்ற முடியும் எனச் சொன்னார்.
அகோங்கிற்கும் கூட்டரசு அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை விளக்குவதற்கு அவர் தமது
உரையைத் தயாரிக்கும் தமது பத்திரிக்கை செயலாளருக்கும் தமக்கும் இடையிலான உறவுகளைப்
பயன்படுத்தினார்.