பக்காத்தான் ‘கறுப்பு 505’ கேஎல் பேரணி நடத்தலாம், அதற்குமுன்…..

1 anvபக்காத்தான் 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்துக்கிணங்க நடந்துகொண்டால் கோலாலும்பூரில் ‘கறுப்பு 505’ பேரணியை நடத்தலாம் என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி.

“அதாவது (பிகேஆர் நடப்பில் தலைவர்) அன்வார் (இப்ராகிம்) அச்சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் போலீஸ் அதை அனுமதிக்கும்”, என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஏற்க வேண்டும் என்று பேரரசர் கூறியுள்ளபோதிலும் பேரணிக்குத் திட்டமிடுவது பற்றி வினவப்பட்டதற்கு ஜஹிட் இவ்வாறு பதிலளித்தார்.

பேரணியை அரங்கினுள் நடத்துவதா, வெளியில் நடத்துவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என  அன்வார் நேற்று கூறியிருந்தார்.

அமைதிப் பேரணிச் சட்டப்படி, அப்படிப்பட்ட கூட்டம் நடத்தப்படுவது பற்றி 10 நாள்களுக்கு முன்னதாகவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். பேரணி நடத்தும் இடத்துக்கு உரியவர், இடத்தைப் பயன்படுத்த எழுத்துவழி அனுமதி அளித்திருக்கவும் வேண்டும்.

இதனிடையே, கோட்டா பாருவில், ஜூன் 12-இல் நடத்தப்படும் பேரணி சட்ட விரோதமானது என்பதால், அதில் பொதுமக்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று மாவட்ட போலீஸ் அதிகாரி இட்ரிஸ் அப்துல் ரபார் அறிவுறுத்தியுள்ளார்.

அப்பேரணி பற்றி அதன் ஏற்பாட்டாளர்கள் இன்னும் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றாரவர். 10 நாள்களுக்கு முன்பே அவர்கள் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.