மலேசிய செய்தி இணையத் தளங்கள் நியாயமாக செய்திகளை வெளியிடுகின்றன

kiniஇணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி செய்திகளின் தரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தைக்  கொண்டது எனக் கூறுவதை விட ‘மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும்’ நோக்கத்தை கொண்டது எனச்  சொல்வதே பொருத்தமானது என CIJ எனப்படும் சுயேச்சை இதழியல் மய்யம் கூறுகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தான் மேற்கொண்ட ஊடகக் கண்காணிப்பு ஆய்வின் போது கட்டுப்பாடுகளைக் கொண்ட அச்சு, ஒலிபரப்பு ஊடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகங்கள் ‘சிறப்பாக செயல்படுவது’ தெரிய வந்ததாக ஒர் அறிக்கையில் அந்த அமைப்பு தெரிவித்தது.

கட்டுப்பாடு இல்லாத நடவடிக்கைகள் காரணமாக இணைய ஊடகங்கள் 13வது பொதுத் தேர்தல்
பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “பிஎன் கூட்டணிக்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும்
ஏறத்தாழ சமநிலையான தரமான இடங்களை வழங்கியது தெரிய வந்தது” என CIJ குறிப்பிட்டது.

“அதற்கு முக்கியக் காரணம் அச்சு, ஒலிபரப்பு ஊடகங்களைப் போல் அல்லாது இணைய ஊடகங்கள்
கட்டுப்படுத்தப்படாததால் செய்திகளை வெளியிடுவதில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ள
முடிந்ததாகும்,” என்றும் CIJ நம்புகின்றது.

கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யும் சிங்கப்பூர் நடவடிக்கையை பின்பற்ற வேண்டாம் என்றும் அது
அரசாங்கத்துக்கு அறிவுரை கூறியது. உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் மோசமான நிலையில்
அந்தக் குடியரசு இருப்பதை அது சுட்டிக்காட்டியது.