செகுபார்ட் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

cheguபிகேஆர் தலைவர் பத்ருல் ஹுசாம் ஷாஹ்ரின், மே 25ம் தேதி ‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் போலீசாருக்குத் தகவல் கொடுக்கத் தவறிய குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இன்று காலை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது அந்தக் குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டது.

2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் கொண்டு வரப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது பத்ருல் ஹிஷாம் அதனை மறுத்தார்.

அந்தப் பேரணி பற்றி 10 நாட்கள் முன்னதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவருக்கு
நோட்டீஸ் கொடுக்கத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா பாடாங் தீமோரில் அந்தப் பேரணி நடத்தப்பட்டது. 13வது பொதுத் தேர்தலில்
நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு நாடு முழுவதும் பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்த பேரணிகளில் அதுவும் ஒன்றாகும்.

அரசு தரப்பு சார்பில் ஷாஹாருடின் வான் லாடின் ஆஜரானார். செகுபார்ட்-டை யாரும்
பிரதிநிதிக்கவில்லை.

அவர் வழக்குரைஞர் ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கும் பொருட்டு வழக்கு நிர்வாகத்துக்கு ஜுலை 9ம் தேதியை நீதிபதி யாஸ்மின் அப்துல் ரசாக் நிர்ணயம் செய்தார்.

பின்னர் அவர் செகுபார்ட்-டை அவரது சொந்த உத்தரவாதத்தின் பேரில் விடுவித்தார். தாம் நீதிமன்ற
நடவடிக்கைகளில் கலந்து கொள்வதாகவும் போலீசார் நீதிமன்ற அழைப்பாணையை வழங்கிய போது அவர்களுடன் ஒத்துழைத்ததாகவும் அதற்கு முன்னர் செகுபார்ட் சொன்னார்.

“நீதிமன்றத்துக்கு வராமல் இருக்கும் நோக்கம் அவருக்கு இல்லை,” எனக் குறிப்பிட்ட நீதிபதி எல்லா
நீதிமன்ற நடவடிக்கைகளிலும் செகுபார்ட் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவருக்கு
நினைவுபடுத்தினார்.

நீதிமன்றத்தைச் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். கலகத் தடுப்புப்
போலீசாரும் காணப்பட்டனர். ஆனால் செகுபார்ட் ஒரே ஒரு ஆதரவாளருடன் மட்டுமே அங்கு
வந்தார்.

“உண்மையான இலக்கு ஸாஹிட்”

chegu1எதிர்ப்புக்களை ஒடுக்கும் நடவடிக்கை அம்னோ கட்சி தேர்தல்கள் நடைபெறுவதை ஒட்டி அம்னோ உள் அரசியல் போராட்டத்தின் விளைவு என நீதிமன்றத்துக்கு வெளியில் செகுபார்ட் நிருபர்களிடம் கூறிக் கொண்டார்.

அம்னோ உதவித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அகமட் ஸாஹிட் ஹமிடியின் அரசியல்
நிலையை களங்கப்படுத்தி அழிப்பது பக்காத்தான் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக
எடுக்கப்படும் நடவடிக்கையின் நோக்கம் என அவர் சொன்னார்.

அம்னோவுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடும் முக்கியத் தரப்புக்கள் ஸாஹிட்டை பலிகடாவாக ஆக்கியுள்ளன என்றும் செகுபார்ட் கூறிக் கொண்டார்.

“அம்னோ உள் அரசியலுக்கு மக்களைப் பலியாக்க வேண்டாம்,” என்றார் அவர்.

‘கறுப்பு 505’ பேரணிகளை ஏற்பாடு செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பக்காத்தான்
தலைவர்கள், ஜனநாயகப் போராளிகளில் செகுபார்ட்-டும் ஒருவர் ஆவார்.

TAGS: