தடுப்புக் காவல் மரணங்கள் குறித்து நாளை என்ஜிஓ-களுக்கு விளக்கமளிப்பு

1paulபிரதமர்துறை அமைச்சர் பால் லவ், தடுப்புக்காவல் மரணங்கள்மீது நடைபெற்ற அமைச்சரவை விவாதத்தில் காணப்பட்ட முடிவு குறித்து நாளை அரசு-சார்பற்ற அமைப்புகளுக்கு விளக்கமளிப்பார்.

அந்த விளக்கமளிப்பு பிரதமர்துறையில் காலை மணி 9.30க்கு நடைபெறும் என்று மஇகா வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி கூறினார்.

“அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விவாதிப்போம்.  அவ்விவகாரம் மீது அமைச்சரவை நீண்ட விவாதம் நடத்தியதாக தெரிகிறது”, என்று வேள்பாரி நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

1 paul velஅமைச்சர பால் லவ், நேற்று அமைச்சரவையில்  அறிக்கை சமர்ப்பிக்குமுன்னர்,  தடுப்புக் காவல் மரணங்கள் மீது பின்னூட்டம் பெற விரும்பி செவ்வாய்க்கிழமை, மஇகா உள்பட இந்தியர்களைக் கொண்ட என்ஜிஓ-களைச் சந்தித்தார்.

இதைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பிரச்னையாக மட்டும் கருதக்கூடாது என்றுரைத்த வேள்பாரி மற்ற இனக் அமைப்புகளும் நாளைய விளக்கமளிப்புக்கு அழைக்கப்படும் என்றார்.

“மலாய்க்காரர்களும் சீனர்களும்கூட தடுப்புக்காவலில் இருந்தபோது இறந்து போனதுண்டு”.

தெரு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மிரட்டல்

செவ்வாய்க்கிழமை லவ்வுடன் நடைபெற்ற சந்திப்பில் ஒரு என்ஜிஓ, 2010-இலிருந்து-மலாய்க்காரர்கள் 64 பேர், சீனர்கள் 30 பேர், இந்தியர்கள் 28 பேர் என- 122 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிவரத்தை முன்வைத்தது.

இவ்விவகாரத்துக்கு அரசாங்கம் தீர்வுகாணாவிட்டால் தெரு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பல இந்திய என்ஜிஓ-கள் மிரட்டல் விடுத்துள்ளன.

ஆனால், முதலில் அமைச்சரின் விளக்கமளிப்பு. அதன்பின்னரே ஆர்ப்பாட்டம் நடத்துவதா வேண்டாமா என்று முடிவெடுப்பது என்ற தீர்மானத்தில் அவை உள்ளன.

வேள்பாரியும்கூட தெரு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக ஏற்கனவே மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.