இணையத் தளச் செய்திகளுக்கான புதிய அனுமதிச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 134 சிங்கப்பூர் வலைப்பதிவாளர்கள் தங்கள் இணையத் தளங்களை இருட்டடிப்பு செய்தனர்.
அந்த அனுமதிச் சட்டம் சுயேச்சை ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என அவர்கள்
வருணித்தனர்.
அவர்கள் தங்கள் அகப்பக்கங்களில் கறுப்புத் திரையைப் போட்டு அதன் மீது ‘#FreeMyInternet’ (என்
இணையத்தை விடுவியுங்கள்) என்னும் வாசகத்தை எழுதியுள்ளனர் என ஏஎப்பி செய்தி நிறுவனம்
குறிப்பிட்டது.
நகர மய்யத்தில் ஹோங் லிம் பூங்காவில் அமைந்துள்ள பேச்சாளர் அரங்கில் கடந்த சனிக்கிழமை நடந்த
கூட்டம் பற்றியும் அதில் குறிக்கப்பட்டிருந்தது.
“இது சமூக-அரசியல் வலைப்பதிவுகள் இயக்கம் மட்டுமல்ல. வாழ்வியல் முறைகள், உணவு, தொழில்நுட்பம் வரையிலான எல்லா இணையத் தளங்களும் இருட்டடிப்பில் பங்கு கொண்டுள்ளன.”
“புதிய விதிமுறைகள் விரிவாக தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை யாரையும் பாதிக்கக் கூடும் என்ற விழிப்புணர்வை அந்த பல வகையான இணையத் தளங்கள் உணர்த்துகின்றன,” என இணையக் குடிமகன் (TOC) இணையத் தளத்தின் சூ செங் சி சொன்னதாக ஏஎப்பி தகவல் வெளியிட்டுள்ளது.
சூ, சிங்கப்பூர் வலைப்பதிவாளர்களுடைய பேச்சாளர் எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை தொடக்கம் 24 மணி நேரத்துக்கு TOC அகப்பக்க இருட்டடிப்பு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதுடன் “உங்களால் படிக்க அல்லது உங்களுக்குத் தெரியாமல் போனால் இப்படித் தான் இருக்கும்” என்றும் எழுதப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் குறைந்த பட்சம் 50,000 வருகையாளர்களைக் கொண்ட செய்தி இணையத்
தளங்களும் இரண்டு மாதங்களில் வாரம் ஒன்றுக்கு சராசரி குறைந்தது சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட கட்டுரை
ஒன்றை வெளியிடும் இணையத் தளங்களும் அனுமதி பெற வேண்டும் எனக் கூறும் புதிய சட்டத்தை
ஊடக மேம்பாட்டு வாரியம் (MDA) வெளியிட்ட பின்னர் அந்த ஆட்சேப இருட்டடிப்பு
நடத்தப்பட்டுள்ளது.
இப்போதைக்கு பெரிய இணையத் தளங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு புதிய சட்டத்தை உடனடியாகப்
பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படலாம் என்றாலும் ‘புதிய விதிமுறைகள் வழங்கும் விரிவான
அதிகாரங்களினால்’ தங்கள் மீதும் காலப் போக்கில் குறி வைக்கப்பட்டு ஒடுக்கப்படலாம் என
அஞ்சுவதாக வலைப்பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அந்த நடவடிக்கையை சுதந்திரமான ஊடகங்களை
விரும்புகின்றவர்கள் கடுமையாகக் குறை கூறியுள்ள போதிலும் மலேசிய அரசாங்கம் சிங்கப்பூரைப்
பின்பற்ற விரும்புவதாக பல்லூடக, தொடர்பு அமைச்சர் அகமட் சாப்ரி சிக் திங்கட்கிழமை
அறிவித்துள்ளார்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி…. வாழ்துக்கள் ஒரு ஜனநாயக குன்றிய நாட்டை நாம் பின் பற்ற போகிறோமே .