புறக்கணிக்கப் போவதாக மஇகா மருட்டல்!

G-Palanivelபேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவி மஇகா-வுக்கு வழங்கப்படாவிட்டால் அந்த மாநில அரசாங்கப் பதவிகள் எதனையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என மஇகா மருட்டியுள்ளது. அந்தப் பதவி ஒர் இந்தியருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

12வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பேரா மாநிலத்தை 2009ம் ஆண்டு பிஎன்  எடுத்துக் கொண்ட பின்னரும் அதற்கு முன்னரும் அந்தப் பதவியை இந்தியர்  ஒருவர் வகித்து வந்ததாக கட்சித் தலைவர் ஜி. பழனிவேல் இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இப்போது அந்தப் பதவி எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பேரா மந்திரி புசார்  அந்தப் பதவியை எங்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.”

“இல்லை என்றால் மஇகா பேராக்கில் பிஎன் நட்புறவுக் கட்சியாக இருக்கும். ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகள் உட்பட  எந்தப் பதவிகளையும் மஇகா ஏற்றுக் கொள்ளாது,” என்றார் அவர்.

அந்த விவகாரத்தையும் கட்சி தேர்தல் சம்பந்தப்பட்ட மற்ற பிரச்னைகளையும்  விவாதிக்க ஜுன் 18ம் தேதி கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என்றும் அந்த  கேமிரன் ஹைலண்ட்ஸ் எம்பி-யுமான பழனிவேல் சொன்னார்.

2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து டிஏபி-யின் வி சிவகுமார் அந்தப் பதவியை  வகித்தார். பிஎன் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றிய பின்னர் மஇகா-வின் ஆர்  கணேசன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கட்சியின் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள்

MIC-Velpariஇதனிடையே மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை நடத்துமாறு  பழனிவேலைக் கேட்டுக் கொள்ளுமாறு கட்சியின் தலைமைச் செயலாளர் ஏ  சக்திவேலு-வுக்கு மஇகா வியூக இயக்குநர் எஸ் வேள்பாரி திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மஇகா தனது அமைப்பு விதிகளுக்கு இணங்க கட்சித் தேர்தல்களை நடத்த தவறி  விட்டதாக மே 20ம் தேதி சங்கப் பதிவதிகாரியிடம் (ஆர்ஒஎஸ்) மஇகா உறுப்பினர்  ஒருவர் புகார் செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை அவர்  மேற்கோள் காட்டினார்.

நடப்புத் தலைமைத்துவத்தின் நடப்புத் தவணைக் காலம் மஇகா அமைப்பு விதிகள்  நிர்ணயித்துள்ள மூன்று ஆண்டு கால வரம்பை ஏற்கனவே தாண்டி விட்டது.

“தவறுகளை நாம் கௌரவமாகவும் துணிச்சலாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.  உருப்படியான, அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மூலம் இந்திய சமூகம், நாடு  ஆகியவற்றின் நம்பிக்கையை நாம் மீண்டும் பெறுவதற்கான ஆற்றல் நம்மிடம்  உள்ளது என்பதையும் நாம் காட்ட வேண்டும்.”

“அமைப்பு விதிகள் சம்பந்தப்பட்ட நடப்புப் பிரச்னைகளை ஒதுக்கக் கூடாது.  அந்தப் பிரச்னைகள் கட்சிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என  எனது வழக்குரைஞர் நண்பர்கள் சொல்கின்றனர்,” என அவர் எச்சரித்தார்.

போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மீது மத்திய செயற்குழு கூடி விவாதிக்க  வேண்டும் என தாம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அதற்கு  எந்தப் பதிலும் இல்லை என்றும் இந்த வேண்டுகோளையும் சக்திவேல் அலட்சியம்  செய்யக் கூடாது என்றும் வேள்பாரி சொன்னார்.

“ஜுன் 10ம் தேது திங்கட்கிழமை மாலை மணி 5.00க்குள் எனக்கு பதில் கிடைக்கா விட்டால் ஓர் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு மஇகா அமைப்பு  விதிகளுக்கு ஏற்ப மத்தியக் குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினருடைய ஆதரவு எனக்கு உள்ளது என்பதை நான் உங்களுக்கு இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்,” என்றும் அவர் எச்சரித்தார்.

TAGS: