நெகிரி செம்பிலானில் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்குப் பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் போதுமானது

convertநெகிரி செம்பிலானில் தங்கள் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்வதற்கு  இஸ்லாத்தை தழுவிய பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் இருந்தால் போதும்  என அந்த மாநில இஸ்லாமிய விவகாரத் துறை கூறியுள்ளது.

அந்த மாநிலத்திலும் மற்ற மாநிலங்களிலும் உள்ள சட்டங்களில் அது தெளிவாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்தத் துறையின் இயக்குநர் ஜோஹானி ஹசான்  சொன்னார்.

“தங்கள் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்வதற்கு முன்னர் பெற்றோர்
இருவருடைய ஒப்புதலும் தேவை எனச் சட்டம் சொல்லவில்லை.”

பெற்றோர்களில் ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறினால் பிள்ளைகளையும்  இயல்பாகவே (automatically) மதம் மாற்றம் செய்ய முடியும்,” என அவர்  சொன்னதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

என்றாலும் அவரது அறிக்கை, சிவில் சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் திருமணம்  செய்து கொண்ட போது இருந்த சமயத்தையே பிள்ளைகள் பராமரிக்க வேண்டும்  என 2009ம் ஆண்டு அமைச்சரவை செய்த முடிவுக்கு மாறாக அமைந்துள்ளது.

ஷாரியா நீதிமன்றத்தை அணுகுங்கள்

பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமையைப் பெறுவதற்குச் சில தனி நபர்கள் ஷாரியா  நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவை  அந்தக் கொள்கையை அறிவித்தது.

ஜெலுபுவைச் சேர்ந்த 29 வயதான ஒரு மாது, பிரிந்து சென்ற தமது கணவர்  தங்களது எட்டு வயது, ஐந்து வயதுக் குழந்தைகளை ரகசியமாக மதம் மாற்றம்  செய்துள்ளதாகக்  தெரிவித்துள்ளது  பற்றி ஜொஹானி கருத்துரைத்தார்.

2004-ஆம் ஆண்டு அந்தத் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 30  வயதான கணவர் கடந்த ஆண்டு குடும்பத்தைக் கைவிட்டு விட்டு இஸ்லாத்தை  தழுவியதாக கூறப்பட்டது. சிவில் சட்டப்படி அவர்கள் இருவரும் இன்னும்  திருமணமான தம்பதிகள் ஆவர்.

பிள்ளைகள் மதம் மாற்றம் செய்யப்பட்ட முடிவை மாற்றுமாறு செய்து கொண்ட  முறையீட்டை இஸ்லாமிய விவகாரத் துறை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து அந்த  மாது போலீசில் புகார் செய்தார்.

ஷாரியா நீதிமன்றத்துக்கு முறையீடு செய்வது தான் அந்த மாது-க்கு உள்ள ஒரே  வழி எனக் குறிப்பிட்ட ஜொஹானி, அவர் முஸ்லிமாக இல்லாததால் அது  பிரச்னையாக இருக்கக் கூடும் எனச் சொன்னார். ஷாரியா நீதிபரிபாலனத்திற்கு  அவர் உட்பட்டவர் அல்ல என்பதே அதற்குக் காரணமாகும்.