சிங்கப்பூரில் இணையத் தள அனுமதிக்கு எதிராக வலைப்பதிவாளர்கள் பேரணி

internetசிங்கப்பூரில் உள்நாட்டு செய்தி இணையத் தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய  அனுமதி நிபந்தனைகளை மீட்டுக் கொள்ளுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும்  பொருட்டு ஹொங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் அரங்கில் 2,500க்கும்  மேற்பட்ட மக்கள் கூடினர்.

#FreeMyInternet என அழைக்கப்பட்ட வலைப்பதிவாளர் குழு ஒன்று அந்த  அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜுன் முதல் தேதி செய்தி இணையத்  தளங்கள் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.internet1

அந்த நடவடிக்கை தணிக்கை செய்வதற்கான முயற்சி என்றும் இணையத்தில்  சிங்கப்பூரர்கள் தகவல்களைப் பெறுவதற்கான உரிமைகளை அது மீறுகின்றது  என்றும் அந்தக் குழு கருதுகின்றது.

ஊடக மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ள அந்த நடவடிக்கைக்கு எதிரான முதல்  போராட்டம் வெற்றி அடைந்துள்ளது தனக்கு ஊக்கமளித்துள்ளதாக  #FreeMyInternet அமைப்பு ஒர் அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட ஊடக வடிவமைப்பில் திருப்புமுனையாக  அந்தப் பேரணி அமைந்துள்ளது என பல ஊடக கருத்துரையாளர்கள்  தெரிவித்தனர்.

அந்த நடைமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளும் இணைய மனுவில் நேற்று  பிற்பகல் வரையில் 4,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இணைய இருட்டடிப்பில்  150க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் பங்கு கொண்டனர். வலைப்பதிவாளர்கள்
நேற்று நடத்திய பேரணியில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஊடக மேம்பாட்டு வாரியம் அனுமதி நிபந்தனையை மீட்டுக் கொள்ள வேண்டும்  எனத் தான் தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக #FreeMyInternet அமைப்பு மேலும்  தெரிவித்தது.