தடுப்புக் காவல் மரணங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கோலாலும்பூரில் டாங் வாங்கியிலும் சிலாங்கூரில் சுபாங் ஜெயாவிலும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவது ஏன் என 29 என்ஜிஓ-கள் ஒன்றுகூடி கேள்வி எழுப்பியுள்ளன.
“சுபாங் ஜெயா போலீஸ் நிலையங்கள் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்படும் கைதிகளின் கொலைக் களங்களாகக் காட்சி அளிக்கின்றன. யுஎஸ்ஜே 8 லாக்-அப்பில் 2013-இல் இறந்தவர் எண்ணிக்கை இதுவரை இரண்டு.
“இவ்வாண்டு ஜனவரி 14-இல் சான் சின் தே; இப்போது (ஜப்பான் நாட்டவரான) நொபிரோ மட்சுஷிட்டா.
“2009-இல் குகன் ஆனந்தன் இறந்தது சுபாங் ஜெயா, தைபான் போலீஸ் நிலையத்தில்”, என Stop State Violence (அரசு வன்முறையை நிறுத்து) இயக்கம் இன்று ஓரு அறிக்கையில் கூறியது.
“இந்த போலீஸ் நிலையங்கள் போன்றே, டாங் வாங்கி போலீஸ் நிலையமும் இரத்தக்கறை படிந்த நிலையமாகும். கடந்த ஆண்டில் நான்கே மாதங்களில் மூன்று மரணங்கள் அங்கு நிகழ்ந்துள்ளன.”.
சந்திரன் பெருமாள் (செப்டம்பர் 10), வொங் திங் பிங் (நவம்பர் 29), நாகராஜன் (டிசம்பர் 24) ஆகியோர் அங்கு லாக்-அப்பில் இருந்தபோது இறந்தார்கள்.
இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் எண்மர் தடுப்புக் காவலில் இறந்து போனார்கள் என மனித உரிமை என்ஜிஓ-கள் ஏற்கனவே அறிவித்துள்ளன.
ஆகக் கடைசியாக இரண்டே வாரங்களில் மூன்று மரணங்கள்: என். தர்மேந்திரன் (மே 21), ஆர். ஜேம்ஸ் ரமேஷ் (மே 26), பி.கருணாநிதி (ஜூன் 1).
சனிக்கிழமை நிகழ்ந்த மட்சுஷிட்டாவின் மரணத்தையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒன்பதாகும்.
“11 நாள்களில் மூன்று மரணங்களால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குமுன் போலீஸ் லாக்-அப்பில் மேலும் ஒரு மரணம் நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்”,என Stop State Violence இயக்கத்தின் அறிக்கை கூறியது.
சனிக்கிழமை இறந்த மட்சுஷிட்டா ஒரு ஜப்பானியர். வெளிநாட்டவர் ஒருவர் போலீஸ் லாக்-அப்பில் இறந்துபோனது அதுதான் முதல் தடவை என்று எண்ணி விட வேண்டாம்.
“கடந்த ஆண்டிலேயே வெளிநாட்டவர் மரணமொன்று போலீஸ் லாக்-அப்பில் நிகழ்ந்துள்ளதாக சுவாராம் கூறுகிறது.
“தாய்லாந்தைச் சேர்ந்த செல்வி தியந்தொங் சைபனியா, 2012 செப்டம்பர் 7-இல் தாமான் ஜோகூர் ஜெயா போலீஸ் நிலையத்தில் இறந்து போனார். அம்மரணம் பொதுமக்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டது” என தெனாகானிதா, சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள், சுவாராம் முதலிய அமைப்புகளைக் கொண்ட அவ்வியக்கம் கூறியது..
மட்சுஷிட்டா விவகாரத்தில் மரணத்துக்கான காரணத்தை அறிவிப்பதில் போலீஸ் அவசரம் காட்டக்கூடாது என அது எச்சரித்தது.
“ஊகத்தின் அடிப்படையில் அறிக்கை விடுக்கலாகாது என Stop State Violence இயக்கம் நினைவுறுத்துகிறது”.
தர்மேந்திரன் விசயத்தில் “மூச்சுத் திணறல் ஏற்பட்டு” இறந்தார் என போலீஸ் அவசரம் அவசரமாக அறிவித்தார்கள். ஆனால், பிணப் பரிசோதனையில் அவர் அடி உதையால் இறந்தார் என்ற உண்மை தெரிய வந்தது.
“குற்றவியல் நடைமுறைச் சட்டம், போலீஸ் காவலில் இறந்துபோனவர்களின் மரண விசாரணையை ஒரு மேஜிஸ்ட்ரேட் நடத்த வேண்டும் என்கிறது.
“எனவே ஊகங்கள் தெரிவிப்பதை நிறுத்திக்கொண்டு சட்டம் அதன் கடமையைச் செய்ய ஒத்துழைக்க வேண்டும்”, என அது கேட்டுக்கொண்டது.
“இப்படிப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்க முடிவுகட்ட” போலீஸ் மீதான புகார்களையும் அவர்களின் தப்பான நடத்தைகளையும் விசாரிக்க சுயேச்சை ஆணையம்(ஐபிசிஎம்சி) தேவை என்ற கோரிக்கையை அந்த Stop State Violence இயக்கம் மீண்டும் வலியுறுத்தியது.
“போலீசின் நடவடிக்கைகளுக்கு அவர்களையே பொறுப்பாக்க முடியாமல் இருப்பது நாட்டில் போலீஸ் படையைச் சீரமைப்பதில் அரசாங்கத்துக்கு அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது”, என்றும் அந்த அறிக்கை கூறியது.