இசி தலைவர் அழியா மை கடிதத்தைக் காட்ட வேண்டும் அல்லது பதவி ‘துறக்க வேண்டும்’

azizஅழியா மையில் மிக அதிகமாக சில்வர் நைட்டிரேட்டை கலப்பதால் ஏற்படும்  அபாயம் பற்றி சுகாதார அமைச்சு எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணைய (இசி)  தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் காட்ட வேண்டும்.

அவர் அதனைச் செய்யத் தவறினால் இசி தலைவர் பதவியை அஜிஸ் ராஜினாமா  செய்ய வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.

அழியா மையில் ஒரு விழுக்காட்டுக்கு மேல் சில்வர் நைட்டிரேட்டை கலப்பதால்  உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் (அது மறுக்கப்பட்ட போதிலும்)  என எச்சரிக்கும் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை தந்ததாக அஜிஸ் தொடர்ந்து கூறிக்  கொள்வது பற்றி லிம் கருத்துரைத்தார்.

அழியா மை மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டதும் நீண்ட நாட்களுக்கு
இருப்பதற்கு சில்வர் நைட்டிரேட் உதவுகின்றது.aziz1

எளிதாக கழுவக் கூடிய அழியா மையை வாங்குவதற்கு 6 மில்லியன் ரிங்கிட்  விரயமானதற்கு இசி சுகாதார அமைச்சு மீது ‘மறைமுகமாக பழி போடுகிறது’ என  பினாங்கு முதலமைச்சருமான லிம் சொன்னார்.

“சுகாதார அமைச்சு கூட இசி-யை நம்ப முடியாத போது தேர்தல்களை இசி  தூய்மையாகவும் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் என மக்கள் எப்படி  நம்ப முடியும் ?” என லிம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் வினவினார்.

“அந்த அழியா மை குளறுபடி எஞ்சியிருந்த சிறிதளவு இசி-யின் நேர்மையையும்  அழித்து விட்டது. அதன் மீதான நம்பிக்கையும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு  தாழ்ந்து விட்டது.”

“எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிஎன் நடத்தும் அரசியல் தாக்குதல்களை இசி இந்த  அளவுக்கு பின்பற்றியதில்லை. பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் மீது வழக்குப்  போடப் போவதாகக் கூட இசி மருட்டியுள்ளது.”

சுகாதார அமைச்சுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது

அந்த மையில் ஒரு விழுக்காட்டுக்கு மேல் சிலவர் நைட்டிரேட்டைக் கலக்க  வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரித்ததாக சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ்  டைம்ஸ் நாளேட்டுக்கு மே 12ல் அளித்த பேட்டியில் அப்துல் அஜிஸ்  தெரிவித்திருந்தார்.

“நாங்கள் ஆறு மில்லியன் ரிங்கிட் கொடுத்துள்ளோம். அது தரம் குறைந்த மை  அல்ல. நாங்கள் ஒரு விழுக்காட்டுக்கு மேல் சில்வர் நைட்டிரேட்டை சேர்க்க  முடியவில்லை.”

“அந்த மையுடன் ஒரு விழுக்காட்டுக்கு மேல் சில்வர் நைட்டிரேட்டை கலந்தால்  அது சிறுநீரகத்தைப் பாதிப்பதோடு புற்று நோயை ஏற்படுத்தலாம் என்றும்  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ள கடிதம் எங்களுக்குக் கிடைத்தது,” என அவர்  அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

aziz3ஆனால் அஜிஸின் கூற்றை நடப்பு சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் மறுத்துள்ளார். அழியா அமை மீது பாதுகாப்பு அறிக்கை எதனையும் சுகாதார  அமைச்சு வழங்கவில்லை என்றும் அத்தகைய அறிக்கையை வழங்குமாறு இசி  கேட்டுக் கொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார்.

ஆனால் கடந்த சனிக் கிழமை மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றில்  தாம் ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார்.

“ஆம், நாங்கள் அந்த மையை பாதுகாப்பு மதிப்பீட்டுக்காக அமைச்சுக்கு
அனுப்பினோம். எங்களிடம் பதில் உள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.aziz2

மே 5 பொதுத் தேர்தலில் தங்களது ஆள் காட்டி விரலில் போடப்பட்ட அழியா  மையை எளிதாக அழிக்க முடிந்துள்ளதாக பல வாக்காளர்கள் புகார் செய்த  பின்னர் அதன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த மை குறைந்தது ஏழு நாட்களுக்கு இருக்கும் என இசி தொடக்கத்தில்  கூறியிருந்தது.