ஜிஞ்சாங் ஆட்சேபம் மீது பாஸ் உதவித் தலைவரைப் போலீசார் விசாரித்தனர்

ayubபாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், மாணவர் போராளி அடாம் அட்லி  அப்துல் ஹலிம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்து நடத்தப்பட்ட  மெழுகுவர்த்தி விழிப்பு பேரணியில் கலந்து கொண்டது தொடர்பில் தமது  வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்று கெப்போங் போலீஸ் நிலையத்துக்குச்  சென்றார்.

அவரிடம் புலனாய்வு அதிகாரி 20 கேள்விகளை எழுப்பினார். ஆனால்
அவருடைய வழக்குரைஞர் சுல்ஹஸாமி ஷரிப் ஆலோசனை கூறியதால் அவர்  எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து விட்டார்.ayub1

“ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்கு வெளியில் நான் நிகழ்த்திய உரை தொடர்பாக  அந்தப் புலனாய்வு இருந்தது. என்ன நடந்தது, என்ன பார்த்தேன், நான் என்ன  சொன்னேன் என்பது பற்றியும் அவர்கள் வினவினர். அடாமை எனக்குத் தெரியுமா  என்றும் அவர்கள் கேட்டனர்,” என சலாஹுடின் பின்னர் கூறினார்.

அடாம் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி மே 22ல் நடத்தப்பட்ட அந்த  விழிப்பு பேரணியில் கலந்து கொண்ட கோபிந்த் சிங் டியோ, டாக்டர் தான் செங்  கியாவ், இங் ஸ்வீ லிம், ரோனி லியூ ஆகிய நான்கு டிஏபி தலைவர்களும் கூட  வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதாக கூறப்படுவது மீது
குற்றவியல் சட்டத்தின் 141வது பிரிவின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.