ஆட்சியாளர்களின் ஆணைகளை விமர்சிக்கலாம், நெகிரி இளவரசர்

எந்தவொரு  பாதிப்பையும் ஏற்படுத்தாத வரை ஆட்சியாளர்கள் விடுக்கும் ஆணைகளைக் கல்வியாளர்களும் ஊடகங்களும் விவாதிப்பதில் தவறில்லை என்கிறார் நெகிரி செம்பிலான் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவர்.

பேச்சுரிமை இதற்கு இடமளிக்கிறது. மலேசியாகினி மின் அஞ்சல்வழி நடத்திய நேர்காணலில் துங்கு ஜைன் அல்’அபிடின் இவ்வாறு கூறினார்.

“நான் பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் சுதந்திரத்தையும் ஆதரிப்பவன் என்ற முறையில், மலேசியர்களுக்கு எதைப் பற்றியும் விவாதிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்பதை எப்போதுமே  வலியுறுத்தி வந்திருக்கிறேன். விவாதம் அரச நிந்தனைக்குரியதாகவோ, அவதூறு கூறுவதாகவோ, வன்முறையைத் தூண்டிவிடுவதாகவோ இருத்தல் கூடாது.

“கல்வி அமைப்புகளின்வழியும் ஊடகத்தளங்கள் வழியும் தங்கள் கருத்துக்களை வெளியிட தனிப்பட்டவர்களுக்குள்ள உரிமையையும் ஆதரிக்கிறேன்”, என்று ஜனநாயக, பொருளாதாரக் கழகம் என்னும் சிந்தனைக்குழுவின் நிறுவனரான துங்கு ஜைன் அல்’அபிடின் கூறினார்.

சிலாங்கூர் சுல்தானின் அறிக்கையை விமர்சித்திருந்த அரசமைப்புச் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பாரியைக் கண்டிக்கும் குறைகூறல்கள் குறித்து கருத்துக் கேட்கப்பட்டதற்கு ஸ்டார் நாளேட்டின் பத்தி எழுத்தாளருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை (ஜயிஸ்) தேவாலயத்தில் நடத்திய அதிரடிச் சோதனை தொடர்பில் சிலாங்கூர் சுல்தான்  வெளியிட்ட அறிக்கைமீது விமர்சனம் செய்ததன்வழி அப்துல் அசீஸ், மலாய் ஆட்சியாளர் அமைப்புக்கு எதிராகக் கேள்வி எழுப்புகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்துல் அசீசின் கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியாகினியும் கண்டிக்கப்பட்டது.

பதிலுக்கு அப்துல் அசீஸ், 1948 அரசநிந்தனைச் சட்டம், ஆட்சியாளர்களைக் குறைகூற இடமளிப்பதாகக் கூறினார். அதே வேளை, ஆட்சியாளர் அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்று கூற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் (டியுஎம்சி) நடைபெற்ற ஒரு நிகழ்வில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளையும் கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் ஜயிஸிடம் உள்ளன என்றும் ஆனால், தாரங்கள் போதுமான அளவில் இல்லை என்பதால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவியலாது  என்றும் குறிப்பிட்டிருந்தார்.