சாப்ரி: இணைய ஊடகங்களுக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் சட்டம் இயற்றப்பட மாட்டாது

shaberyஇணைய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை அரசாங்கம்  ஆராய்வதாக அறிவித்த தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக்  அந்த விவகாரம் மீது தமது கருத்துக்களை இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அண்மைய எதிர்காலத்தில் இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை  இயற்றும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என சின் சியூ நாளேடு அனுப்பிய  கேள்விக்குக் குறுஞ்செய்தி வழி பதில் அளித்த அவர் சொன்னார்.

இணைய ஊடக இணையத் தளங்கள் பதிவு செய்து கொள்வதைக் கட்டாயமாக்கும்  பொருட்டு சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பின்பற்றி தொடர்பு பல்லூடக அமைச்சு  புதிய சட்டத்தை வரையுமா அல்லது நடப்புச் சட்டங்களை திருத்துமா என சின்  சியூ கேள்வி எழுப்பியிருந்தது.

shabery1அண்மையில் சிங்கப்பூர் அரசாங்கம் செய்ததைப் போல செய்தி இணையத்  தளங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை பிஎன் அரசாங்கம் ஆராய்வதாக கடந்த  திங்கட்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் மாதம் ஒன்றுக்கு 50,000 வாசகர்களை எட்டும் இணைய செய்தி  ஊடகங்கள் ஊடக மேம்பாட்டு வாரியத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என  அந்த நாட்டு அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.

ஜுன் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வந்த அந்தக் கொள்கை இணைய எதிர்ப்புக்களை முறியடிக்க மக்கள் செயல் கட்சி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை  என பலர் கருதினர்.

புதிய விதிமுறைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு மூன்று நாட்களுக்கு  முன்பு ஹொங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் பகுதியில் ஈராயிரத்துக்கும்  மேற்பட்ட சிங்கப்பூரர்கள் ஒன்று திரண்டனர்.