‘நாஸிர் சகோதரர் நஜிப்புக்கு நெருக்குதலை அதிகரித்து விட்டார்

nazirஉத்துசான் மலேசியாவைக் குறை கூறிய ஏர் ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி  அஸ்ரான் ஒஸ்மான் ரானி-க்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததின் மூலம்  நாஸிர் அப்துல் ரசாக் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல்  ரசாக்கிற்கு “அதிகமான பிரச்னைகளை உருவாக்கியுள்ளார்.”

இன்று உத்துசான் மலேசியாவில் வெளியான கருத்துக் கட்டுரையில் ஜைனுடின்  மைடின் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மே 5 பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் அம்னோவும் தமது மூத்த சகோதரர்  நஜிப்பும் எதிர்நோக்கும் ‘நம்பிக்கை நெருக்கடியை’ நாஸிர் புரிந்து கொள்ளத் தவறி  விட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.nazir1

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மலேசிய சீனர்களை இலக்காகக் கொண்டு  உத்துசான் மலேசியா வெளியிட்ட தலைப்புச் செய்தியை ‘இனவாதமானது’ என  வருணித்த அஸ்ரானிடம் ‘பெரும் தலைவருக்கு உள்ள அடையாளம்’  காணப்படுவதாக கடந்த திங்கட்கிழமை நாஸிர் பாராட்டினார்.

பிஎன் தலைமையிலான கூட்டரசு அரசாங்கம் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க  முயன்றவர்களை முறியடிக்க உத்துசான் நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால்  தேர்தலில் மலாய் ஆதரவை அம்னோ தக்க வைத்துக் கொண்டிருக்க முடியாது  என்பதை நாஸிர் புரிந்து கொள்ளவில்லை என்றும் ஜைனுடின் சொன்னார்.

அவர் ஒரு காலத்தில் அந்தப் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியராக
பணியாற்றியுள்ளார்.

“உத்துசான் வழங்கிய துணிச்சலான ஆதரவினாலும் நிதி அபாயத்தை
எதிர்கொண்டதாலும் நாடாளுமன்றத்தில் அம்னோவுக்கு அதிகமான இடங்கள்  கிடைத்துள்ளன. கெடாவையும் பேராக்கையும் கைப்பற்ற முடிந்தது. கிளந்தான்  சட்டமன்றத்தில் கூடுதல் இடங்களையும் வெல்ல முடிந்தது,” என்றார் அவர்.

“சீன சமூகத்தின் தீவிரவாதப் போக்கை உத்துசான் தாக்கியிருக்கா விட்டால்  மலேசியச் சீனர்களுடைய ஆதரவை பிஎன் பெற்றிருக்கக் கூடும் என நாஸிர் ஒரு  வேளை எண்ணக் கூடும்.”

nazir2“உண்மையில் நாஸிர் அம்னோவும் நஜிப்பும் எதிர்நோக்கும் பிரச்னைகளையே  அதிகரித்துள்ளார்,” என ஜைனுடின் சொன்னார்.

அஸ்ரானைப் பாராட்டிய சிஐஎம்பி குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான  நாஸிரை ஜைனுடின் தொடர்ந்து குறை கூறினார்.

“பெரிய தொழில்களில் சம்பந்தப்பட்டுள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு  இடையில் குழப்பம் ஏற்படுவதை நாஸிர் விரும்புகிறார் என்று தான் கருத  வேண்டும். முதலாளித்துவம் வளர்ச்சி காணும் போது பெரிய தொழில் நிறுவனங்கள்  வலுவடைகின்றன. சில வேளைகளில் அரசாங்கத்தை விட வலுவாக இருக்கின்றன.”

“இது ஊடகச் சுதந்திரத்தை மருட்டுகின்றது. நிதி ஆற்றலைக் கொண்டவர்கள்  ஊடகங்கள் மீது செல்வாக்கைப் பெற்றிருக்க முடியும். பொது மக்களுக்கு அது  தெரியாது. அரசாங்கம் கொடுக்கும் நெருக்குதல் மட்டுமே அவர்களுக்குத்  தெரிகின்றது.”

‘எதிர்மறையான விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன’

ஜனநாயக நெருக்கடி-பிரிட்டனுடைய உடற்கூறு என்னும் தலைப்பில் பிரிட்டிஷ்  ஆசிரியர் அந்தோனி சாம்ப்சன் எழுதியுள்ள புத்தகத்தில் உள்ள சில  வாசகங்களையும் ஜைனுடின் மேற்கோள் காட்டினார்.nazir3

“பத்திரிக்கைகளுக்கும் பெரிய தொழில்களுக்கும் இடையிலான பிணைப்பு நீண்ட  கால விளைவுகளைக் கொண்டது: நிதித் துறை ஏற்றத்தின் போது அத்துமீறல்களை  பற்றி நிருபர்கள் தெரிவிக்க இயலாமல் போகின்றது. வர்த்தகப் பகுதிகளுக்கான  நோக்கங்களை உரிமையாளர்களும் விளம்பரதாரர்களும் பொது உறவு  அதிகாரிகளும் நிர்ணயிக்கின்றனர். நிருபர்களுடைய புலனாய்வு பணிகளை  முதலாளிகள் இயற்கையாகவே விரும்புவதில்லை.”

1990ல் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் அதே கருத்துக்களைத்  தெரிவித்துள்ளதாக முன்னாள் தகவல் அமைச்சருமான ஜைனுடின் சொன்னார்.

ஏர் ஏசியாவிடமிருந்து விளம்பரங்களை அல்லது பணத்தைப் பெறுவதற்காக  உத்துசானும் மற்ற நாளேடுகளும்”ஏர் ஏசியாவைப் பற்றிய பாதகமான செய்திகளை”  மறைத்துள்ளன என்றும் அவர் கூறிக் கொண்டார். ஆனால் “அஸ்ரானுக்கு அது  மட்டும் போதுமானது அல்ல,” என்றார் அவர்.

“உத்துசான் தமது சமூக அரசியல் எண்ணங்களைப் பின்பற்ற வேண்டும் என  அஸ்ரான் விரும்புகிறார். அதனால் உத்துசான் மீது நிதி நெருக்குதலைத்  தொடுக்கிறார்.”

“நாஸிர் கொடுத்துள்ள ஆதரவு அவருக்கு ஊக்கமூட்டியிருக்கலாம். ஆனால்  நாஸிர், அம்னோவும் நஜிப்பும் எதிர்நோக்கும் நம்பிக்கை நெருக்கடியைப் புரிந்து  கொள்ளவில்லை.”