ஏர் ஏசியா எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானிக்கு ஆதரவாகப் பேசிய சிஐஎம்பி குழும தலைமை நிர்வாகி நாஸிர் அப்துல் ரசாக்கை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பாராட்டியிருக்கிறார்.
“நாங்கள் யார் பக்கமும் சாயவில்லை. எது சரியோ அதைத் தான் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். உண்மையைப் பேசிய நாஸிரை நாங்கள் பாராட்ட விரும்புகிறோம்,” என லிம் இன்று நிருபர்களிடம் கூறினார்.
“நாஸிரைப் போன்று அவரது சகோதரரும் துணிச்சலாக இருப்பார் என நாங்கள் நம்புகிறோம்,” என நாஸிரை ‘மலாய் எதிர்ப்பாளர்’ எனக் கண்டிக்கும் நேற்றைய உத்துசான் மலேசியா செய்தியை வாசித்த போது அவர் சொன்னார்.
“நாஸிரைப் போன்று அதிகமான மலேசியர்கள் இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் அவ்வாறு இல்லை,” என லிம் வருத்தத்துடன் கூறினார்.
நாஸிர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இளைய சகோதரர் ஆவார்.
உத்துசான் ‘Apa Lagi Cina Mahu’ என்னும் தலைப்பில் வெளியிட்ட தலைப்புச் செய்தியை ‘இனவாதமானது’ என அஸ்ரான் டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து அம்னோவுக்குச் சொந்தமான அந்த ஏடும் மலாய் அரசு சாரா அமைப்புக்களும் அஸ்ரானை கடுமையாக விமர்சனம் செய்தன.
மே 5 தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 52 விழுக்காட்டை பக்காத்தான் ராக்யாட் பெறுவதற்கு ‘சீனர் சுனாமி’ காரணம் என தேர்தலுக்குப் பின்னர் நஜிப் கூறியதைத் தொடர்ந்து அஸ்ரான் உத்துசானை அவ்வாறு வருணித்தார்.
அஸ்ரானிடம் ‘தலைவருக்கு உள்ள அடையாளம்’ இருப்பதாக பாராட்டிய நாஸிரை ‘மலாய் எதிர்ப்பாளர்’ என நேற்று மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் வருணித்தது.
அஸ்ரான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து உத்துசான் ஒரு வாரத்திற்கு அவரைக் கண்டிக்கும் செய்திகளை வெளியிட்டது. ஏர் ஏசியாவைப் புறக்கணிக்குமாறு அம்னோ மூத்த உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதும் அந்தச் செய்திகளில் அடங்கும்.
உத்துசான் தனது செய்திகள் மூலம் இந்த நாட்டில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையில் பகை உணர்வை தோற்றுவிக்க முயலுவதாகவும் லிம் சொன்னார்.
“நாம் ஒருவரை ஒருவர் எதிரிகளாகக் கருத வேண்டும் ?” என அவர் வினவினார்.
“தேர்தலில் தாங்கள் விரும்பும் கட்சியைத் தெரிவு செய்யும் சுதந்திரம் மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது. அது தான் ஜனநாயகம் என அழைக்கப்படுகின்றது,” என லிம் குறிப்பிட்டார்.
“மலேசியர்கள் தங்களுக்குள் பகைவர்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. மற்றவர்களை துரோகிகள் என்றும் மலாய் எதிர்ப்பாளர்கள் என்றும் முத்திரை குத்துவதின் மூலம் அந்த நாளேடு தீய நோக்கத்துடன் செயல்படுகின்றது,” என்றும் அவர் சொன்னார்.