ஜோகூரில் ஷியாரியா குற்றங்களுக்காக 22 மகளிருக்குப் பிரம்படி தண்டனை

syariahஜோகூரில் ஷியாரியா குற்றங்களில் ஈடுபட்டதற்காக பிரம்படி கொடுக்கப்பட்ட 39 பேரில் 22 பேர் பெண்கள் ஆவர். தகாத புணர்ச்சியில் ஈடுபட்டதற்காகவும் திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவில் ஈடுபட்டதற்காகவும் அவர்களுக்கு இத்தண்டனை கொடுக்கப்பட்டது.

பிரம்படி தண்டனையை அனுமதிக்கும்  ஷியாரியா குற்றச்செயல் தண்டனைச் சட்டம்  நாடு முழுக்க அமலுக்கு வந்திருந்தாலும் ஜோகூரில்தான் முதல்முறையாக அத்தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதன்முதலாக  ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகாத உடலுறவில் ஈடுபட்டதற்காக கடந்த ஏப்ரல் 4-இல்  பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டது.

இதற்குமுன் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரிம5,000 அபராதம் அல்லது மூன்றாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என ஜோகூர் இஸ்லாமிய விவகாரத் துறையின் அமலாக்கப் பிரிவு மூத்த உதவி இயக்குனர் முகம்மட் ஜம்ரி கம்பாரி கூறினார்.

பிரம்படி அவர்களைத் தண்டிக்கும் நோக்கத்தில் கொடுக்கப்படுவதில்லை என்றும் குற்றத்தை அவர்களும் பொதுமக்களும் உணர வேண்டும் என்பதற்காகவே கொடுக்கப்படுப்படுகிறது என்றும் ஜம்ரி வலியுறுத்தினார்.

தண்டனை எதிர்பார்த்த விழிப்புநிலையை ஏற்படுத்தி இருப்பதால் “பொது இடங்களில் அல்லது பள்ளிவாசல்களில் வைத்து தண்டனையைக் கொடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம்” என்றாராவர்.

TAGS: