ஜைடின் போலீஸ் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைகளை வழங்கி எட்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் போலீஸ்காரர்களில் அதிகமானோர் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற அந்த ஆணையத்தின் முக்கியமாக பரிந்துரை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என டிஏபி கூறுகிறது.
போலீஸ்காரர்களில் 22 விழுக்காட்டினர் குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்ற வேண்டும் என அந்த ஆணையம் தெரிவித்த யோசனை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார்.
மாறாக குற்றப் புலனாய்வுத் துறையில் இன்னும் மொத்த போலீஸ்காரர்களில் 9 விழுக்காட்டினரே வேலை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
“முக்கியமான காவல் பணிகளில் மொத்த போலீஸ்காரர்களில் 22 விழுக்காட்டினர் அல்லது 20,000 பேர் ஈடுபடுத்தப்பட வேண்டும் என 2005ம் ஆண்டு ஆர்சிஐ அறிக்கை பரிந்துரை செய்தது. துரதிர்ஷ்டவசமாக உள்துறை அமைச்சு அந்தப் பரிந்துரைக்குச் செவிசாய்க்கவே இல்லை.”
“கடந்த எட்டு ஆண்டுகளாக முன்னைப் போலவே போலீஸ் படையில் உள்ள போலீஸ்காரர்களில் 9 விழுக்காட்டினர் மட்டுமே குற்றப் புலனாய்வுத் துறையில் வேலை செய்து வருகின்றனர்,” என புவா சொன்னார்.
“அதற்கு நேர்மாறாக சீருடை அணிந்த போலீஸ்காரர்களில் 41 விழுக்காட்டினர் நிர்வாக வேலைகளைச் செய்கின்றனர். 31 விழுக்காட்டினர் உள்நாட்டு பாதுகாப்பு, ஒழுங்குப் பணிகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் (கலகத் தடுப்பு, பொது நடவடிக்கை
ஆகியவை சம்பந்தப்பட்ட பணிகள்) என அவர் தெரிவித்தார்.