டோனால்ட் லிம் மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்

mcaமசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் முடிவை ஆதரித்ததை மறந்து பேசுகிறார்  கட்சி உதவித் தலைவர் டோனால்ட் லிம் என்று சாடியுள்ளார்.

இரண்டு ஆண்டுக் கூட்டங்களிலும் மத்திய செயலவை கூட்டமொன்றிலும் அம்முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது லிம்மும் அக்கூட்டங்களில் கலந்துகொண்டார் என்று சுவா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“ஆனால் கூட்டங்களுக்குத் தாமதமாக வந்து முன்கூட்டியே சென்று விடுவது அவரது வழக்கமாகும்”.

லிம்முக்கு நினைவூட்டுவதற்காக கூட்டக் குறிப்புகளை முழுமையாக வெளியிடவும் தயார் என்றாரவர்.

நேற்று  நிதியியல் நாளேடான தி எட்ஜ்-இல்,  அம்முடிவு தப்பு என்பதை சுவா ஒப்புக்கொண்டு அதை மறு ஆய்வு செய்ய அவசர பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்ட வேண்டுமென்று லிம் கேட்டுக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

அம்முடிவுக்கு சுவாவே பொறுப்பு என்றும்  மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு அவரை எதிர்க்கும் துணிச்சல் இல்லை என்றும் லிம் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அது தவறு என்றும் அம்முடிவு கட்சியின் முடிவு என்றும் சுவா கூறினார்.

“முடிவு தவறு என்றால் அவசரப் பொதுக்கூட்டத்துக்கு அவரே அழைப்பு விடுக்கலாம்”, என்று குறிப்பிட்ட சுவா இவ்விவகாரம்மீது லிம்முடன் தனிப்பட்ட முறையில் விவாதிக்கவும் தயார் என்றார்

 

TAGS: