505 கறுப்புப் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்துக்குமிடையில் பேரணி நடத்தும் இடம் தொடர்பில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை.
இதை பிகேஆர் வியூகத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இன்று காலை மாநகர் மேயர் அஹ்மட் பீசல் தாலிப்பைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரபிஸி, எதுவானாலும் பக்காத்தான் ரக்யாட் பாடாங் மெர்போக்கில் பேரணியை நடத்தத்தான் போகிறது என்றார்.
அந்த இடத்துக்கு மலேசிய ஒலிம்பிக் மன்றம் முன்பே முன்பதிவு செய்துள்ளதைக் காரணம்காட்டி டிபிகேஎல் பிகேஆரின் விண்ணப்பத்தை நிராகரித்தாலும் ஜூன் 22-இல் 505 கறுப்புப் பேரணி திட்டப்படி நடக்கும் என்றவர் கூறினார்.
“அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளையும் பரிசீலிப்போம். இதைப் பற்றி அவ்வப்போது தகவல் தெரிவித்து வருவோம்”, என்றார்.
ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பில், பேரணியை நடத்த மெர்டேகா அரங்கம், தித்திவங்சா அரங்கம் போன்ற இடங்களை வழங்க டிபிகேஎல் முன்வந்தது.
ஆனால், அவ்விசயத்தில் தாம் மட்டும் முடிவு செய்ய முடியாது என்றும் பக்காத்தான் தலைவர்களையும் மற்ற என்ஜிஓ-களையும் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று ரபிஸி தெரிவித்தார்.