பிஎஸ்எம்: ‘பக்காத்தானில் சேர்த்துக்கொள்ளும்படி நாங்கள் கெஞ்சவில்லை’

arulமலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்),  பொதுத் தேர்தலுக்கு முன் பக்காத்தான் ரக்யாட்டில் சேர விண்ணப்பித்துக் கொண்டது உண்மைதான்.  ஆனால், அதற்காக அக்கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்படி அக்கட்சி ஒன்றும் “மண்டியிட்டு” கெஞ்சவில்லை என்கிறார் அதன் தலைமைச் செயலாளர்  எஸ்.அருட்செல்வன்.

அதில் சேர பிஎஸ்எம் ஆர்வம் காட்டினாலும் அதைச் சேர்த்துக்கொள்ள பக்காதான் ஆர்வம் காட்டாதிருப்பது பற்றி கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: “நாங்கள் 1998-இலிருந்து இருக்கிறோம். பக்காத்தான் 2008 தேர்தலுக்குப்பின் வந்தது. 2008-க்குபின் நடந்துள்ள ஒவ்வொரு  கூட்டத்திலும் எங்கள் உறுப்பினர்கள் பக்காத்தானில் சேரும் விருப்பத்தைத் தெரிவித்து வந்துள்ளனர்”.

அருட்செல்வன் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

இரு தரப்பும் ஒரே நோக்கத்துக்காக பிஎன்-னை புத்ராஜெயாவிலிருந்து வெளியேற்ற போராடி வருவதால் பக்காத்தானில் சேர்ந்துகொள்ளும்படி பக்காத்தான் தலைவர்கள்  பலரும்கூட கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“மக்களும்கூட பொதுத் தேர்தலில் ஒரு வலுவான அணி அமைந்து பிஎன்-னை எதிர்ப்பதைக் காண விரும்பினார்கள். இதையெல்லாம் எங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதனுடன் சேர்வதாக இருந்தாலும் சரிதான் அல்லது அரசியல் ஒத்துழைப்பு மட்டும்தான் என்றாலும் சரிதான்.

“ஆனால், எங்களைப் பக்காத்தானில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மண்டியிட்டுக் கெஞ்சவில்லை. எங்களுக்கும் கொள்கை உண்டு”, என்றாரவர்.

 

TAGS: