ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ மசீச பதவிகளைத் துறந்தார்

mcaசுற்றுலா, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான  ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ சியூ கியோங் தமது ஆயுட்கால  உறுப்பியத்தைத் தவிர மற்ற எல்லா மசீச பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஜோகூர் ஆட்சி மன்றத்துக்கு தாம் நியமிக்கப்பட்ட விவகாரத்தை சில கட்சி  உறுப்பினர்கள் பிரச்னையாக்குவதைத் தடுப்பதற்காக தாம் கட்சிப் பதவிகளைத்  துறப்பதாக ஜோகூர் பாருவில் அவர் நேற்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

தேசிய அமைப்புச் செயலாளர், தலைவர் மன்ற உறுப்பினர், மத்தியக் குழு  உறுப்பினர், தேர்தல் வழிகாட்டிக் குழு உறுப்பினர், ஜோகூர் மாநில மசீச  தொடர்புக் குழு உறுப்பினர், ஜோகூர் மசீச தேர்தல் வழிகாட்டிக் குழுத் துணைத்  தலைவர், பொந்தியான் மசீச தொகுதித் தலைவர் ஆகியவை தீ விலகிக் கொண்ட  பொறுப்புக்களாகும்.

ஜோகூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பை தாம் ஏற்றுக் கொண்டதை  விளக்குவதற்காக ஜுன் 17ம் தேதி மசீச ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில்  அவர் கலந்து கொள்வார்.

ஜோகூர் பிரஜை என்ற முறையில் தாம் சுல்தானுடைய அரச ஆணையை மீற  முடியாது என தீ வலியுறுத்தினார்.

“மாநில அரசாங்கத்தில் பல இனப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது  அரச ஆணையாகும். ஆகவே சீன சமூகத்தைப் பிரதிநிதிக்குமாறு எனக்கு  உத்தரவிடப்பட்டது,” என்றார் அவர்.

கடந்த பொதுத் தேர்தலில் முன்னைக் காட்டிலும் நல்ல அடைவு நிலையைப் பெறா  விட்டால் எல்லா அரசாங்கப் பதவிகளையும் நிராகரிப்பது என்ற கட்சி முடிவையும்  தாம் எதிர்க்கவில்லை என்றும் தீ சொன்னார்.

பெர்னாமா

TAGS: