கர்பால் சிங்: டாக்டர் மகாதீர் தலையீடு பிரதமர் நஜிப்புக்கு அவமானம்

karpalமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்  அரசாங்கத்தை கட்டுப்படுத்த  முயலுவதற்கு பதில் ‘ஒய்வு எடுக்க வேண்டும்’ என டிஏபி தேசியத் தலைவர்  கர்பால் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

2003ம் ஆண்டு பிரதமர் பதவியைத் துறந்த மகாதீர் அரசாங்கத்தை
கட்டுப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

“நஜிப் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என மகாதீர் சொல்வது உண்மையில்  நஜிப்புக்கு அவமானமாகும்,” என கர்பால் கூறினார்.

மகாதீரும் ஒய்வு பெற்ற பின்னர் நாட்டின் முன்னாள் பிரதமர்களைப் போன்று  தனிப்பட்ட அமைதியான வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் அவர்  கருதுகிறார்.

“அவர்கள் அன்றைய அரசாங்கத்தின் மீது தங்கள் செல்வாக்கைத் திணிக்க எதுவும்  செய்யவில்லை,” என கர்பால் இன்று பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“மற்ற நாடுகளிலும் அது தான் நடக்கிறது. அமெரிக்காவில் கூட ஒர் அதிபர் ஒய்வு  பெற்றதும் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.”

“நாட்டின் ஜனநாயக முறையை அவமானப்படுத்தி வரும்” எதிர்க்கட்சிகள் மீது  கடுமையாக நடந்து கொள்ளுமாறு அரசாங்கத்தை மகாதீர் கேட்டுக் கொண்டது  பற்றி கர்பால் கருத்துரைத்தார்.

13வது பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறியதைத் தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் மக்கள் தேர்வை மாற்ற முயலுவதாக மகாதீர் குற்றம் சாட்டினார்.

மே 5 தேர்தல்களில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக கூறிக் கொண்டு பக்காத்தான்  ராக்யாட் “505 கறுப்புப் பேரணிகளை பல வாரங்களாக நடத்தி வருவதைத்  தொடர்ந்து மகாதீர் அவ்வாறு அறிக்கை விடுத்துள்ளார்.

அந்தத் தேர்தலில் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 47 விழுக்காட்டை பெற்ற  போதிலும் பிஎன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.